உயர்நிலைப் பள்ளிகளில் வழக்க
நிலைக்குத் தகுதி பெற்றுள்ள அதிகமான மாணவர்கள் புதிய மதிப்பீட்டு முறையின்கீழ் உயர்மட்ட பாடங்களை எடுத்துப் படிக்கலாம்.
அதன்படி இவ்வாண்டு சுமார் 65 விழுக்காட்டு மாணவர்கள் வழக்கநிலைக்கும் வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவுக்கும் தகுதி பெற்றிருப்பதாகவும் அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் அதிக விருப்பமுள்ள நிலையில் உள்ள குறைந்தபட்சம் ஒரு பாடத்தைத் தேர்வு செய்யலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டு (பிஎஸ்எல்இ) தேர்வு எழுதிய மாணவர்கள் புதிய மதிப்பீட்டு முறையின்கீழ் தேர்வு எழுதிய முதல் தொகுதி மாணவர்கள் ஆவார்கள்.
கடந்த ஆண்டு டி மதிப்பீட்டு முறையின்கீழ் வழக்கநிலைக்குத் தகுதிபெற்ற தொடக்கநிலை 6 மாணவர்களில் 47 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளியில் உயர்மட்டப் பாடங்களை எடுத்துப் படிக்க முடிந்தது. ஆனால் இவ்வாண்டு அறிமுகமான ஏஎல் (சாதனை நிலை) மதிப்பீட்டு முறையின்கீழ் வழக்கநிலை மாணவர்கள், உயர்நிலை 1ல் சவால் மிகுந்த வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) அல்லது விரைவுநிலை பாடங்களுக்குத் தகுதி பெறுவர்.
ஒவ்வொரு பாடத்திலும் அவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து இந்தத் தேர்ந்தெடுப்பு அமையும்.
2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய மதிப்பீட்டு முறை, தேர்வு முடிவில் ஒரே மாதிரி மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களிடையே உள்ள வேறுபாட்டைக் களைய உதவுவதாக அமைச்சு தெரிவித்தது.
இதற்கு முன்பு மாணவர்களுக்கு ஏஸ்டார் முதல் இ வரை தரநிலை வழங்கப்பட்டது.
புதிய முறையின்கீழ் ஒவ்வொரு பாடத்திற்கும் 1 முதல் 8 வரை ஏஎல் மதிப்புப் புள்ளி வழங்கப்படுகிறது.
வழக்கநிலைக்குத் தகுதி பெறும் பிஎஸ்எல்இ தேர்ச்சி மாணவர்கள் ஏஎல் மதிப்புப் புள்ளி 5 அல்லது அதற்கு மேல் சிறப்பாகப் பெற்றிருப்பின் வழக்கநிலை அல்லது விரைவுநிலையில் குறிப்பிட்ட சில பாடங்களை எடுத்துப் படிக்கலாம்.
2018ஆம் ஆண்டு பாட அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்வி அமைச்சு அறிமுகம் செய்தது.
வழக்கநிலை மற்றும் வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவு பாடங்கள் மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப வெவ்வேறு விருப்பப் பாடங்களை எடுப்பதில் அதிக நீக்குப்போக்கைத் தந்தன.
2024ஆம் ஆண்டுக்குள் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் முழு அளவில் பாடங்களின் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையைக் கொண்டு வர அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் கற்றல் பலத்தின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுக்க இது உதவும்.