கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடப்பில் இருந்து டி-ஸ்கோர் என்னும் மாறுபட்ட மதிப்பீட்டு முறைக்கு இவ்வாண்டு முடிவுகட்டப்பட்டுவிட்டது.
புதிய மதிப்பீட்டு முறையின்கீழ் பிஎஸ்எல்இ தேர்வெழுதிய அதிகமான மாணவர்கள் விரைவுநிலைக்குச் செல்கின்றனர்.
இவ்வாண்டு தேர்வெழுதிய 39,119 மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளனர். இது கடந்த 2016ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை ஒத்து உள்ளது.
அந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 1960ஆம் ஆண்டு தேசிய தேர்வு முறை அறிமுகமானதிலிருந்து அடைந்த சிறப்பான தேர்ச்சியாகத் தொடருகிறது.
இவ்வாண்டு 68.4 விழுக்காடு மாணவர்கள் விரைவுநிலைக்குத் தகுதி பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்னர் கல்வி அமைச்சு கூறியது.
இது கடந்த ஆண்டடைக் காட்டிலும் சற்று அதிகம். கடந்த ஆண்டு விரைவுநிலைக்குச் சென்றோர் 66.3 விழுக்காடு.
மேலும், இவ்வாண்டு 18.9 விழுக்காடு மாணவர்கள் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) பயிலத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் 21.2 விழுக்காட்டைக் காட்டிலும் இவ்வாண்டு இது குறைவு.
ஆயினும் வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவுக்குச் செல்லும் மாணவர்களின் விகிதம் கடந்த ஆண்டைப்போலவே அமைந்துள்ளது.
இவ்வாண்டு 11.1 விழுக்காடு மாணவர்கள் அப்பிரிவுக்குத் தகுதி பெற்ற நிலையில் கடந்த ஆண்டு இந்த விகிதம் 11 விழுக்காடாக இருந்தது.