லாரியில் சென்றபோது இரு கட்டுமான ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், அவர்களில் ஒருவர் தமது விரல் நுனியை இழக்கக் காரணமாகிப்போனது.
அந்தக் கட்டுமான ஊழியர்களில் ஒருவர், இன்னொருவரின் இடதுகை சுண்டுவிரல் நுனியைக் கடித்துத் துண்டித்துவிட்டார்.
சக ஊழியரான திரு முத்துச்செல்வத்தின் இடதுகை சுண்டுவிரல் நுனியைக் கடித்துத் துண்டித்த குற்றத்தை லோகன் கோவிந்தராஜ், 30, நேற்று நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.
அரசாங்க, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, இந்தச் சம்பவத்தால் திரு முத்துக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை முடிவுசெய்வதற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் மாவட்ட நீதிபதி லினெட் யாப்.
இந்திய நாட்டவரான லோகன், மூன்று கலன் மது அருந்தியபின் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் சக ஊழியர் இருவருடன் லாரியில் ஏறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிராஞ்சி கிரசென்ட்டில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் இருக்கும் தங்களது வெளிநாட்டு ஊழியர் விடுதிக்கு அருகே அவர்கள் இருந்தனர்.
அவ்வேளையில் போதையில் இருந்த லோகன், திரு முத்தைத் திட்டி, மற்ற ஊழியர்களுடன் அவர் உறங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். அதனைத் தொடர்ந்து, தம்மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு, லாரியில் இருந்து இறங்கும்படி லோகனிடம் சொன்னார் திரு முத்து.
இருவரும் லாரியைவிட்டு இறங்கினர். அதன்பின், தமது இடதுகையை லோகனின் நெஞ்சில் வைத்துத் தள்ளினார் திரு முத்து. அப்போது, தம் வாய்க்கு அருகே இருந்த திரு முத்தினுடைய சுண்டு விரலின் நுனியைக் கடித்துத் துப்பினார் லோகன்.
அவர் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அதனால், திரு முத்தின் விரலில் இருந்து ரத்தம் சொட்டியது. தமது இடதுகை சுண்டுவிரலின் நுனிப்பகுதியைக் காணாததை அவர் உணர்ந்தார்.
உடனடியாக, அவர் விடுதிவாசிகளிடம் உதவி கோரினார். அங்கிருந்த துப்புரவாளர் ஒருவர் அவசர மருத்துவ வண்டிக்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, திரு முத்து கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக அவரது விரல் பகுதி வெட்டியெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் திரு முத்தின் சுண்டுவிரல் நுனிப்பகுதி கண்டு எடுக்கப்பட்டதாகவும் ஆனாலும் அதனை மீண்டும் விரலுடன் ஒட்ட வைக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டது.
பின்னர் லோகன் கைது செய்யப்பட்டார். சம்பவத்தின்போது அவர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியில் திரு முத்தைத் திட்டியதைத் தன்னால் நினைவுகூர இயலவில்லை என்று நீதிமன்றத்தில் லோகன் சொன்னார். ஆயினும், அவர் அதனை மறுக்கவில்லை. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. லோகனின் பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.