தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியைச் சேர்ந்த இயந்திரவியல் துறை மாணவர்கள், மிகைமெய் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் புதிய ஆய்வகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
'ஸ்னைடர் எலக்ட்ரிக்' நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள அந்த 'முன்கணிப்புப் பராமரிப்பு மையத்தின்' மூலமாக கிட்டத்தட்ட 800 மாணவர்கள் மிகைமெய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைவில் இருந்தபடி இயந்திரங்களின் நிகழ்நேர அளவீடுகளைக் கண்காணிக்கலாம்.
முன்கணிப்புப் பராமரிப்பு முறையைக்கொண்டு, ஓர் இயந்திரத்தின் நிகழ்நேரச் செயல்பாட்டை அறியலாம்.
இதனால், செலவுமிக்க, எதிர்பாராத பழுதுகளைத் தடுக்கும் விதமாக முன்னதாகவே நேரம் வகுத்து இயந்திரங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
அதனுடன், கற்றலுக்கு உதவும் வகையில் மிகைமெய் தொழில்நுட்பத்தைத் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாணவர்கள் தங்களது கைபேசிகளில் செயலி ஒன்றை நிறுவிக்கொள்ளலாம்.
தாங்கள் கற்றுவரும் இயந்திரத்தின் படத்தை அவர்கள் வைத்து இருந்தால், அதுகுறித்த கூடுதல் தகவல்களை அச்செயலி அப்படத்தில் மேற்பொருத்தும்.
இதனால் அவ்வியந்திரம் குறித்த தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் காட்சிவழி மாணவர்கள் அறியலாம் என்றும் அதனால் தங்களது வேகத்திற்கு ஏற்ப அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்றும் சொன்னார் இயந்திரவியல் விரிவுரையாளர் சுவா ஸோங் யாங்.
"விரிவுரையாளர்கள் இயந்திரத்தின் செயல்முறை குறித்து விளக்கும்போது, அதன் தொடர்பில் கேள்விகள் கேட்க மாணவர்கள் சிலர் அஞ்சுகின்றனர். இப்புதிய தொழில்நுட்பம் வாயிலாக, அவர்கள் எளிதாகப் பங்கெடுத்துக்கொள்ளவும் ஈடுபாடுகொள்ளவும் முடியும்," என்றார் அவர்.
தனது கற்றல் பயணத்தில் புதிய ஆய்வகத்தைப் பயன்படுத்திக்கொள்ள இருப்பதை எண்ணி உற்சாகமாக இருக்கிறார் முதலாமாண்டு இயந்திரவியல் தொழில்நுட்ப 'நைட்டெக்' மாணவி லாய் ஷி ஹுவா.
புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்துள்ள, அதில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றுள்ள ஒருவரை நிறுவனங்கள் வேலையில் அமர்த்த விரும்பலாம் என்ற அவர், ஊழியரணியில் இணைய புதிய ஆய்வகத்தின்மூலம் தாம் கூடுதல் தகுதியைப் பெற முடியும் என நம்புகிறார்.
இந்த ஆய்வகம் $240,000 செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

