இம்மாதம் 18ஆம் தேதி பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கி, இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையத்திற்கான கட்டுமானப் பணிகளை உள்ளடக்கும் சாங்கி ஈஸ்ட் திட்டத்திற்கான பணியிடத்தில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
தானா மேரா கோஸ்ட் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து அன்றிரவு 8.05 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த 43 வயது ஊழியர் இயக்கிக்கொண்டிருந்த 'அதிர்வு உருளை' எனும் மண்ணைக் கெட்டிக்கும் இயந்திரம் கவிழ்ந்ததை அடுத்து, அவர் அதில் சிக்கிக்கொண்டார்.
'ஐஎன்ஏ ஹெவி மெஷினரி அண்ட் எக்விப்மென்ட்' எனும் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றி வந்தார். அவர் சிக்கிக்கொண்ட இயந்திரத்தின் எடை ஏறக்குறைய 10 டன் எனக் கூறப்படுகிறது.
சக ஊழியர்கள் பலர் சேர்ந்து, அவரை இயந்திரத்தில் இருந்து மீட்டதாக நம்பப்படுகிறது. சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இல்லை. காயங்கள் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
அந்த ஊழியரின் மரணத்தில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகப்படவில்லை.
உயிரிழந்த அந்த ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த பணியிடத்தில் மண்ணைக் கெட்டிப்பது தொடர்பான எல்லாப் பணிகளையும் நிறுத்திவைக்க அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

