பொதுக் கழிவுநீர்க் கால்வாயில் சட்டவிரோதமாகத் திரவக் கழிவுகளைத் திறந்துவிட்ட ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் $12,200 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோன்ற குற்றத்திற்காக, 'என்எஸ்எல் ஆயில்கெம் லாஜிஸ்டிக்ஸ்' என்ற அந்நிறுவனத்திற்கு இப்போது மீண்டும் $17,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியும் அக்டோபர் 26ஆம் தேதியும் திரவக் கழிவுகளைப் பொதுக் கழிவுநீர்க் கால்வாயில் திறந்துவிட்டது தொடர்பில் அந்நிறுவனத்தின் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டன.
2020 செப்டம்பர் 24ஆம் தேதி பொதுப் பயனீட்டுக் கழகம் வழக்கமான சோதனையை மேற்கொண்டது. அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக கன உலோகங்கள் அடங்கிய கழிவுநீரை அந்நிறுவனம் பொதுக் கழிவுநீர்க் கால்வாய்களில் திறந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின், அக்டோபர் 26ஆம் தேதி பின்னிரவில் கழகம் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, அந்நிறுவன ஊழியர்கள் திரவக் கழிவுகளைப் பொதுக் கழிவுநீர்க் கால்வாயில் திறந்துவிட்டதைக் கண்டுபிடித்தது.
"இம்முறை, தங்களது தவறுகளைப் பொதுப் பயனீட்டுக் கழகம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, 'என்எஸ்எல் ஆயில்கெம்' நிறுவனம் கண்காணிப்புக் கருவியையும் ஆய்வுக்கலனில் இருந்த மாதிரியெடுப்புக் குழாய்களையும் சேதப்படுத்தி இருந்தது," என்று கழகம் விளக்கியது.
அதனைத் தொடர்ந்து, அன்றைய நாளே கழிவுநீரைப் பொதுக் கழிவுநீர்க் கால்வாயில் திறந்துவிட அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி மீட்டுக்கொள்ளப்பட்டது.

