சிங்கப்பூருக்கு இருமொழித்திறன் வலிமையாக இருந்து வருகிறது. சித்தாந்தம், கலாசார, வெவ்வேறு ஆளுமை முறையால் பிரிவினையை எதிர்நோக்கும் உலகில், பாலத்தை இணைப்பவர்களாக தங்களை வேறுபடுத்திக்கொள்ள இருமொழித்திறன்
சிங்கப்பூரர்களுக்கு உதவியுள்ளது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று புதன்கிழமை (நவம்பர் 24) கூறினார்.
இருமொழித்திறனில் சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெப்போதையும்விட முக்கியமாக இருப்பதாக அவர் சொன்னார்.
உலகின் மற்ற பகுதிகளில் நிலவும் கலாசாரப் போட்டிகளில் தன்னை அறியாமல் சிங்கப்பூர் ஈர்க்கப்படுவதை தவிர்க்க இருமொழித்திறன் உதவ முடியும் என்றார் அவர்.
சன்டெக் சிங்கப்பூர் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இருமொழித் திறனுக்கான லீ குவான் இயூ நிதியின் 10வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது திரு சான் இதனைக் கூறினார்.
திரு சான் தலைமை தாங்கும் அந்த நிதி, கிட்டத்தட்ட 200 திட்டங்களுக்கு ஆதரவளிக்க கடந்த 10 ஆண்டுகளில் $27 மில்லியன் கடப்பாடு கொண்டுள்ளது.