மலேசியாவில் பெய்த பருவமழை காரணமாக சிங்கப்பூரில் காய்கறி விலைகள் உயர்ந்துவிட்டன. குறிப்பாக சில காய்கறிகளின் விலை இருமடங்காகிவிட்டது. விலை ஏற்றத்தைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று உள்ளூர் காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய் போன்றவற்றின் விலை 5 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை ஏறிவிட்டதாக ஃபேர் பிரைஸ் பேரங்காடியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அதேநேரம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இதர காய்கறி
களின் விலையில் பெரிதாக மாற்றமில்லை என்றார் அவர்.
சூழ்நிலையை ஃபேர்பிரைஸ் அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று கூறிய அவர், அக்டோபரில் விலை ஏற்றத்தை பேரங்காடிகள் ஏற்றுக்கொண்டதாகவும் இம்மாதத் தொடக்கத்திலிருந்து விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
"மலேசியாவில் இருந்து பெரும்பாலான காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் தாய்லாந்து, இந்தோனீசியா மற்றும் சீனாவிலிருந்தும் காய்கறிகளைத் தருவிக்கிறோம். உள்ளூர் தோட்டங்களில் இருந்தும் சில காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன," என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
அண்மைய பருவநிலை காரணமாக பல்வேறு பொருள்களின் விலை ஏறிவிட்டதைக் காணமுடிந்ததாக கோல்டு ஸ்டோரேஜ், ஜையன்ட் போன்ற பேரங்காடிகளை நடத்தும் டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமம் கூறியுள்ளது. சிங்கப்பூருக்கு ஆகப்பெரிய அளவில் காய்கறிகளை விநியோகம் செய்வது மலேசியாதான். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 582,000 டன் காய்கறிகளைச் சிங்கப்பூர் இறக்குமதி செய்தது. அதில் மலேசியாவின் பங்கு 42%.
மலேசியாவில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகவும் நவம்பர் இறுதி வரை இதே நிலை தொடரக்கூடும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்தத் தொடர் மழை காரணமாக கிளந்தான், திரங்கானு மற்றும் பெர்லிஸ் போன்ற மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் நிலை இருப்பதாகவும் அது கூறியது.