ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் அந்த நாடு
களுக்குச் செல்வதில் இருந்து சிங்கப்பூரர்கள் பின்வாங்கவில்லை என்று பயணத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய சுற்றுப் பயணத்துக்குப் பதிவு செய்தவர்கள் அதனைத் தொடர விரும்புவதாக அவர்கள் கூறினர்.
'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான சிறப்புப் பயண ஏற்பாடு குறித்த விசாரணை 204% அதிகரித்துள்ளதாகவும் பெரும்பாலும் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்ல பலரும் ஆர்வத்துடன் விசாரித்து வருவதாகவும் உலக சுற்றுப் பயண நிறுவனமான 'த டிராவல் கார்ப்பரேஷன்' கூறியது.
கரன் துளி, 37, எனப்படும் சந்தை மேலாளர் ஒருவர் நேற்று தமது மனைவியுடன் 11 நாள் இத்தாலி சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
முன்னதாக, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் பேசிய அவர், ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று அதிகமாகக் காணப்பட்டபோதிலும் இத்தாலியில் அது கட்டுக்குள் இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், ஆபத்து இல்லை என்று கூறிவிட முடியாது என்றார் அவர். அதேபோல இன்னும் இரு வாரங்களில் ஸ்பெயின் செல்ல இருக்கும் கைட்லின் இயோ, 24, பகுப்பாய்வு ஆலோசகர் தமது பயணத் திட்டத்தில் உறுதியாக உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 அதிகரித்து வருவது தொடர்பாக தமது பெற்றோர் கவலைப்பட்டபோதிலும் தமக்குப் பயமில்லை என்றார் அவர்.
"நீண்ட காலமாக நான் எங்கும் பயணம் செல்லவில்லை. எனவே இப்பயணத்தை எனது காதலனுடன் சென்று அனுபவிப்பதில் ஆர்வமாக உள்ளேன்," என்றார் அவர்.
ஐரோப்பிய பயணத்துக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் பயண ரத்து, பயண தள்ளிவைப்பு போன்றவையும் நிகழ்ந்து வருவதாக ஒருசில பயண நிறுவனங்கள் கூறின.
இரு சிங்கப்பூரர்கள் தங்களது ஐரோப்பிய பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக 'இயு ஹாலிடேஸ்' நிறுவனத்தின் இயக்குநர் ஓங் ஹான் ஜீ கூறினார்.
ஆனாலும் ேதவைதான் அதிகமாக இருக்கிறது என்றும் வாரத்திற்கு 100 முன்பதிவுகள் விடிஎல் பயணத்திற்குச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

