ஒருவித நுரையீரல் புற்றுநோய்க்கும் காற்று மாசுக்கும் தொடர்பு: ஆய்வு
உலகளவில் புகைபிடிக்காத பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது ஏன் என்று இதுவரை தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதிகரிக்கும் காற்று மாசுக்கும் உலகில் ஏற்படும் ஒருவித நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தலைமையிலான அனைத்துலக விஞ்ஞானிகள் குழு இதனைக் கண்டுபிடித்துள்ளது. எல்ஏடிசி என்று அறியப்படும் நுரையீரல் புற்றுநோய் மரபு ரீதியான காரணங்களோடும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைப்பாணி காரணிகளோடும் வலுவாக ஒத்துப்போவதாக என்டியு தெரிவித்து உள்ளது.
பூமி மீது படர்ந்திருக்கும் ஒரு கன மீட்டர் கரிமத்தின் ஒவ்வொரு 0.1 ைமக்ரோகிராமும் உலகளவில் எல்ஏடிசி புற்றுநோய் அதிகரிப்பில் 12 விழுக்காடு பங்களிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. என்டியு மற்றும் ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வை நடத்தின. சரிவர எரியாத புதைபடிவ எரிபொருளில் இருந்து உருவாகும் கரிமத் துகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து விளக்கிய என்டியுவின் சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் துறை மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் ஜோசஃப் சங், "காற்றுத் தூய்மையின்மைக்கும் உலகளவில் அதிகரித்து வரும் ஒருவித நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளோம்," என்றார்.
500க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் எடுத்த நிதி பகுப்பாய்வாளர்
பெண்களின் பாவாடைக்குள் அந்தரங்கமாக 500க்கும் மேற்பட்ட காணொளிகளை எடுத்த ஆடவர் ஒருவருக்கு
நீதிமன்றத்தில் 13 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இவ்வாறு ஆபாசப் படங்களை எடுப்பதை வோங் குவோங் யான், 37, எனப்படும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இருப்பினும் கடந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி விவோசிட்டி கடைத்தொகுதி துணிக்கடை ஒன்றில் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். பெண்களின் ஆபாசத் தோற்றத்தின் மூலம் இன்பம் அடைதல் மற்றும் பெண்களின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. நிதி பகுப்பாய்வாளராக வேலை செய்து வந்த அவர், வேலை நேரம் முடிந்த பின்னரும் வார இறுதி நாட்களிலும் கடைத்தொகுதிகள் போன்ற இடங்களில் குற்றங்களைச் செய்து வந்ததாகவும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அவர் இலக்காகக் கொண்டு செயல்பட்டதாகவும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஐரோப்பிய கொவிட்-19 சான்றிதழுக்கு சமமானது சிங்கப்பூர் சான்றிதழ்
சிங்கப்பூரின் கொவிட்-19 சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றி யத்தின் மின்னிலக்க கொவிட்-19 சான்றிதழுக்குச் சமமாக அங்கீகரிக்கப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனால் சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பயணம் செய்வோர் தங்களது கொவிட்-19 சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்கலாம். இந்த அங்கீகாரம் நேற்று முதல் நடப்புக்கு வந்தது. ஐரோப்பிய ஒன்றிய சான்றிதழை வைத்திருப்போருக்கு உரிய அதே நிபந்தனைகள் சிங்கப்பூர் கொவிட்-19 சான்றிதழ் வைத்திருப்போருக்கும் பொருந்தும். ஒருவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதையும் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதையும் தெரிவிப்பதோடு நோயிலிருந்து குணமடைந்தவர் என்னும் விவரத்தையும் ஐரோப்பிய ஒன்றிய கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ் பெற்றிருக்கும். ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வசிக்கும் ஐரோப்பியர் அல்லாதோர் போன்றோ ருக்கு இந்தச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதனை ஏற்க சிங்கப்பூர் சம்மதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் கூறியது.
இருமொழிக் கொள்கை சிங்கப்பூரின் பலம்: சான் சுன் சிங்
இருமொழிக் கொள்கை சிங்கப்பூரின் பலம் என்றும் உலகில் இணைப்பை ஏற்படுத்த அதன் குடிமக்களுக்கு இது உதவுகிறது என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கை மீதான சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெப்போதையும் விட முக்கியமானதாகவும் அதிக பொருத்தமுள்ளதாகவும் விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
உலகின் இதர பகுதிகளில் நிகழ்வதைப்போல தங்களை அறியாமலேயே கலாசாரப் போட்டிகளால் ஈர்க்கப்படுவதில் இருந்து சிங்கப்பூரை இருமொழிக்கொள்கை தடுத்து உதவுகிறது என்றார் திரு சான்.
இருமொழி மேம்பாட்டுக்கான லீ குவான் இயூ நிதியத்தின் பத்தாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்று அவர் பேசினார். அந்த நிதியத்தின் தலைவராக திரு சான் உள்ளார். கடந்த பத்தாண்டுகளில் $27 மில்லியனுக்கு மேல் நிதி கடப்பாடு கொண்டு கிட்டத்தட்ட 200 திட்டங்களுக்கு ஆதரவு வழங்கி உள்ளது. மேலும் 120 அமைப்புகளுடன் பங்காளித்துவம் செய்து கொண்டது இந்த நிதியம்.