பறவைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பாத நோய் அவற்றுக்கு வராமல் இருக்க முப்பரிமாணக் காலணிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலிக்கான் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அந்தக் காலணிகள் கடந்த இரண்டு ஆண்டு
களாக ஜூரோங் பறவைப் பூங்காவின் பறவை மருத்துவக் குழுவும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள கெய்யோ-என்யுஎஸ் நிலையமும் மேம்படுத்தியுள்ளன. இந்தக் காலணிகளைப் பயன்படுத்தி 'போடோடெர்மடைட்டிஸ்' எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பறவை
களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஜூரோங் பறவைப் பூங்காவும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தெரிவித்துள்ளன.
'போடோடெர்மடைட்டிஸ்' எனும் நோயால் பறவைகளின் கால்களில் வீக்கம், புண் ஏற்படலாம். சிகிச்சை அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பாதிக்கப்பட்ட பறவைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலணி முதல்முறையாக ஜூரோங் பறவைப் பூங்காவில் உள்ள 21 வயது கழுகு ஒன்றுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டில் 'போடோடெர்மடைட்டிஸ்' நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த கழுகுக்கு அந்த காலணி அணிவிக்கப்பட்டதும் 17 வாரங்களில் அது குணமடைந்தது.

