திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கி விற்பதாகக் கூறி ஏமாற்றிய மோசடியில் குறைந்தது 41 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மொத்தம் $203,000 தொகையை அவர்கள் ஏமாந்து இழந்தனர்.
தங்கள் பெயரில் 'ஃபிலிம்கோ' என்று குறிப்பிட்டிருந்த (Filmgo) நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று தெரிவித்தது.
திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கி விற்பதன்மூலம் தரகுப் பணம் ஈட்டலாம் என்று ஆசைகாட்டி பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டனர்.
அது குறித்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேரும்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு 'மிச்சாட்' (Michat), 'வீச்சாட்' (Wechat) போன்ற குறுந்தகவல் தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஃபிலிம்கோ புரொடக்ஷன், ஃபிலிம்கோ டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் மோசடி வேலையில் ஈடுபட்டன.
மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், ஃபிலிம்கோ நிறுவனங்களின் இணையத்தளத்தில் தங்களுக்கென்று கணக்கை உருவாக்குமாறு கூறப்பட்டது. மேலும், அந்த நிறுவனங்களின் சேவைகளை இன்னும் எளிதில் பயன்படுத்த செயலிகளைத் தரவிறக்கம் செய்யும்படியும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள், திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கவும் அவற்றின் விற்பனையிலிருந்து தரகுத் தொகையைப் பெறவும் தங்களின் கணக்குகளில் பணம் நிரப்ப வேண்டும்.
பணத்தை அனுப்புவதற்காக ஏமாந்தவர்களுக்கு, அடையாளம் தெரியாத நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டன.
வேலையை முடித்தபின்னர்தான் தரகுத்தொகை கிடைக்கும் என்று பிலிம்கோ கூறியிருந்ததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகம் எழவில்லை.
ஆனால் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல்போனபோது தாங்கள் ஏமாந்ததை அவர்கள் உணர்ந்தனர்.
ஃபிலிம்கோ டிஜிட்டல் எனும் நிறுவனம், இம்மாதம் 5ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது என்றும் அது தனி உரிமையாளருக்குச் சொந்தமானது என்றும் இணைய விவரங்கள் கூறுகின்றன.
குறைந்த உழைப்பில் பெரிய வருவாய் ஈட்டலாம் என்று ஆசைகாட்டும் வேலைவாய்ப்புத் திட்டங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று போலிசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். மேலும், உண்மை என்று உறுதி செய்யப்படாத தளங் களிலிருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்வதையும் தெரியாதவர் களுக்கு பணம் அனுப்புவதையும் தவிர்க்கும்படி அவர்கள் ஆலோசனை கூறினர்.