சுமார் $268,000 மதிப்புள்ள போதைப்பொருள்
பிடிபட்டது; 39 வயது மாது கைது
போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் தொடர்பில் 39 வயது சிங்கப்பூர் மாது ஒருவரை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 23ஆம் தேதி கைதுசெய்தனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 479 கிராம் ஹெராயின், 546 கிராம் ஐஸ் மாத்திரைகள், 2,183 கிராம் கெட்டமின், ஐந்து சுபுடெக் மாத்திரை வில்லைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவற்றின் சந்தை மதிப்பு சுமார் $268,000 என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது.
அந்த மாது டோவர் கிரெசண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஹெராயினும் போதைப்பொருள் தொடர்பிலான வேறு பொருட்களும் இருந்தன.
பின்னர் அந்த வட்டாரத்தில் உள்ள வீட்டிலிருந்தும், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்தும் மற்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணை தொடர்கிறது. போதைப்பொருட்களின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ், 15 கிராமுக்கும் அதிகமான ஹெராயின் வைத்திருப்பவருக்கும் அதைக் கடத்துபவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
பேருந்தில் முகக்கவசம் அணியாமல்
தொல்லை தந்தவருக்குச் சிறை
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல், பிடிபட்டபோது பேருந்து ஓட்டுநர்களை வசைபாடியவருக்கு ஐந்து வாரங்கள், பத்து நாட்கள் சிறைத்தண்டனையும் $6,000 அபராதமும் நேற்று விதிக்கப்பட்டது.
வில்லியம் ஆவ் சின் சாய், 50, கடந்தாண்டு ஜூன் 28ஆம் தேதி ஒரு பேருந்து ஓட்டுநரை நோக்கி காரி உமிழ்ந்தார். இரண்டு மாதங்கள் கழித்து இன்னொருவரை தகாத வார்த்தைகளால் வசைபாடினார்.
அத்துடன் பேருந்துகளில் சக பயணிகளுக்கும் அவர் தொல்லை தந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் ஒரு மாதை நோக்கி காரி உமிழ்ந்தார். இவ்வாண்டு ஜூன் மாதம், தன்னருகே அமர்ந்திருந்த இந்திய ஆடவரை தகாத வார்த்தைகளால் வசை பாடினார்.
மேலும், ஆவ் இவ்வாண்டு ஏப்ரலில் சலவை இயந்திரக் கடையில் கால்சட்டையைக் கீழிறக்கி மலம் கழித்தார்.
ஆவ்வுக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அவர் முன்னதாக தொல்லை தந்தது, வேறொருவரிடம் வன்முறையுடன் நடந்துகொண்டது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
காண்டாமிருக வாழ்விடத்தில் குதித்த
இளையர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள காண்டாமிருகம் இருக்கும் இடத்தில், பின்னால் குட்டிக்கரணம் போட்ட இளையர், குறும்புச்செயல், அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ரால்ஃப் வீ யீ காய், 19, நீதிமன்றத்தில் காணொளி வழி தோன்றினார்.
வீ, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி விலங்கியல் தோட்டத்தில் அச்செயலில் ஈடுபட்டார். கடந்த ஜூலை மாதம் வீ மீது குறும்புச்செயல், அத்துமீறி நுழைந்தது, சேதப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பிணையில் விடுவிக்கப்பட்ட வீ, கஞ்சா உட்கொண்ட காரணத்தால் அவரது பிணை ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டார்.
இம்மாதம் 5ஆம் தேதி வீ, நீதிமன்றத்துக்கு வரத் தவறியதை அடுத்து, அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
வேலையிடப் பாதுகாப்புச் சட்டத்தால் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படாது
வேலையிடப் பாகுபாட்டின் தொடர்பில் திட்டமிடப்பட்டுவரும் சட்டம், எவை நியாயமான நடைமுறைகள் என்பதை மாற்ற விழையவில்லை. அதனால் தற்போது நியாயமான வேலைவாய்ப்பு வழிகாட்டிகளைப் பின்பற்றி வரும் முதலாளிகளுக்கு தங்கள் நடைமுறைகளில் மாற்றம் இருக்கப்போவதில்லை.
மனிதவள அமைச்சும் மற்ற பங்காளி அமைப்புகளும் இணைந்து மனிதவள நிபுணர்களுக்காகவும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காகவும் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இவ்வாறு கூறப்பட்டது.
வேலையிட நியாய நடைமுறைகள் பற்றிய அக்கலந்துரையாடலில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
வேலையிடப் பாகுபாட்டை எதிர்ப்பது குறித்து சிங்கப்பூர் திட்டமிட்டு வரும் சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்குச் சிரமமானதாக வரைவது நோக்கமல்லை என்று கலந்துரையாடலில் கூறப்பட்டது.

