அடுத்த மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் தளவாடத் துறையின் சில வேலைகள் மாற்றம் காணலாம், சில முற்றிலும் இல்லாமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இண்டஸ்ட்ரி 4.0' எனப்படும் அடுத்தகட்ட தொழில்துறை உருமாற்றத்தின் தொழில்நுட்ப அம்சங்களைக் கடைப்பிடிக்கும்போது இந்நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
'ஜேடிஎம்' எனப்படும் வேலைகள் உருமாற்றத் திட்டத்தின்கீழ் தளவாடத் துறையில் உள்ள 56 வேலைகள் ஆராயப்பட்டன. இவற்றில் 54 விழுக்காட்டு வேலைகள் ஓரளவாவது மாற்றம் காணும் எனத் தெரியவந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட வேலைகள் மாற்றியமைக்கப்படும் அல்லது முற்றிலும் அகற்றப்படும். இந்த 54 விழுக்காட்டு வேலைகளைத் தற்போது 36,000 ஊழியர்கள் செய்கின்றனர். பொதுவாக எல்லா வேலைகளும் ஏதாவது மாற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'டேட்டா அனலசிஸ்' எனப்படும் தரவு ஆய்வு, 'சாஃப்ட்வேர் டெவலப்மன்ட்' எனும் மென்பொருள் மேம்பாடு போன்ற புதிய வேலைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய புதிய வேலைகள் கூடுதல் எண்ணிக்கையில் இன்னும் வேகமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைகள் உருமாற்றத் திட்டத்தின் 28வது 'ஜாப்ஸ் சிச்சுவேஷன் ரிப்போர்ட்' எனப்படும் வேலைகள் நிலவர அறிக்கையில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தளவாடத் துறையில் உள்ள வேலைகளில் வரவிருக்கும் மாற்றங்களால் அவை கூடுதல் மனநிறைவை வழங்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். புதிதாக உருவாகும் வேலைகள் ஒளிமயமான வருங்காலத்தை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தற்போது பணியில் இருப்போர், புதிதாக வேலை தேடுவோர் ஆகியோரைக் கவர வேலைகளை மறுசீரமைக்குமாறு நான் நிறுவனங்களை ஊக்குவிக்கிறேன். இது, உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் கூடுதல் மதிப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட ஊழியர்களுக்கு வகைசெய்யவும் உதவும்," என்று கிளமென்டி லூப் பகுதியில் உள்ள தளவாட நிலையம் ஒன்றுக்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் மெய்நிகர் வாயிலாகச் சொன்னார் டாக்டர் டான். 2019ஆம் ஆண்டு தகவல்களின்படி தளவாடத் துறையில் 86,000க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

