செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
9c63bbda-3096-445f-a613-8fe177ac8b52
-

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் அமைப்புக்கு விருது

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ 24 மணிநேர தொலைபேசி சேவையை வழங்கும் ஹெல்த்சர்வ் அமைப்புக்கு மனிதவள அமைச்சு விருது வழங்கியுள்ளது. லாப நோக்கில்லா அமைப்பான ஹெல்த்சர்வ், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு மாதந்தோறும் இவ்வமைப்பிற்கு சுமார் 400 தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டபோது ஹெல்த்சர்வுக்குக் கூடுதல் அழைப்புகள் வந்தன. இது தொலைபேசி சேவையைக் கவனித்துக்கொள்பவர்கள் பயிற்சிபெற்ற தொண்டூழியர்கள், 'கவுன்சலர்ஸ்' எனப்படும் மனநல ஆலோசகர்கள்.

'எம்ஓஎம் வேலியூட் பார்ட்னர் அவார்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள விருதுகளை மனிதவள அமைச்சு சமூகத்திற்குத் தொண்டாற்றிய அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கியது. மொத்தம் 10 விருதுகள் வழங்கப்பட்டன.

தொழிற்சாலை உற்பத்தி அதிகரிப்பு

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி சென்ற மாதம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் சென்ற மாதம் உற்பத்தித் திறன் 16.9 விழுக்காடு அதிகரித்ததாகப் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவித்தன. உயிரியல் மருத்துவத் துறை மீண்டுவந்தது. பொதுவாக அனைத்து உற்பத்தித் துறை நிறுவனங்களும் வளர்ச்சி கண்டன.

சிங்கப்பூரின் முக்கியத் துறையான மின்னியல் துறை, சென்ற மாதம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் பதிவான 7.2 விழுக்காட்டைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவு. துல்லியப் பொறியியல் துறையும் 9.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

தஞ்சோங் பகார் விபத்து: தேறிவரும் ரேபி ஓ

தஞ்சோங் பகாரில் ஐவரைப் பலிவாங்கிய விபத்தில் சிக்கிய 26 வயது குமாரி ரேபி ஓ மீது பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தான் மெதுவாகக் குணமடைந்துவந்தாலும் உடல்நலம் தேறிவருவதாக அவர் கூறினார். குமாரி ஓ அடுத்த ஆண்டு இன்னும் சில காலம் மருத்துவமனையில் இருப்பார்.

தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த திரு ஜொனத்தன் லோங் விபத்தில் சிக்கியபோது அவரைக் காப்பாற்ற முயன்றார் குமாரி ஓ. அப்போது இவரின் உடலின் 80 விழுக்காட்டுப் பகுதியில் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டன. வாகனத்தில் இருந்த திரு லோங், அவரது நான்கு நண்பர்கள் அனைவரும் மாண்டனர்.

இவ்விபத்து கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று அதிகாலை சுமார் 5.40 மணிக்கு நிகழ்ந்தது. திரு லோங் ஓட்டிக்கொண்டிருந்த 'பிஎம்டபிள்யூ' வாகனம் தஞ்சோங் பகாரில் உள்ள கடைவீடு ஒன்றுடன் மோதியதால் விபத்து நேர்ந்தது.

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய

47 வயது சிங்கப்பூர் மாது

தனது பணிப்பெண்ணின் முன்னாள் முதலாளி அவரைத் துன்புறுத்தியது தெரிந்த பிறகும் 47 வயது பூ யீ பெங் அதே செயலில் ஈடுபட்டார். தனது 32 வயது பணிப்பெண்ணான திருவாட்டி மா காய்ங்கை அவர் துன்புறுத்தியிருக்கிறார். சென்ற ஆண்டு மே மாதம் எட்டாம் தேதியன்று மியன்மாரைச் சேர்ந்த மா காய்ங்கின் முகத்தை பூ தள்ளிவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு 'சாப்ஸ்டிக்ஸ்' குச்சிகளைக் கொண்டு பணிப்பெண்ணின் முட்டியிலும் தலையிலும் தட்டியிருக்கிறார்.

திருவாட்டி மா காய்ங்கிடம் சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டை பூ ஒப்புக்கொண்டார். இவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக நடந்துகொண்ட மேலும் ஒரு குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருவாட்டி மா காய்ங், பூவின் வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார். வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வது, பூவின் ஏழு வயது மகனைப் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட பொறுப்புகள் அவருக்கு இருந்தன.