தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் 34 வயது மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் தோல்வியடைந்துள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருளைக் கொண்டுவந்த அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஈராண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரின் வழக்கை நிராகரித்த பிறகு பன்னீர் தனது வழக்கறிஞர்களான திரு டூ சிங் ஜி, திரு லீ ஜி என் ஆகியோரிடம் கண்ணாடித் திரைவழி பேசினார். அதன் பின்னர் மூவரும் அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க உதவும் வகையில் மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு பன்னீர் அளித்த தகவல்கள் இருந்தனவா என்பது கருத்தில் கொள்ளப்பட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுத்தது. 51.84 கிராம் எடைகொண்ட ஹெரொயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்ததாக பன்னீர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு 2017ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.