சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் (எஸ்ஐஏ) கருடா இந்தோனீசியா நிறுவனமும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
இதனையடுத்து அந்த நிறுவனங்களுக்கு இடையிலான நெடுநாளைய நல்லுறவு மேலும் பலமடையும். இரு நிறுவனங்களும் பரந்த அளவிலான வர்த்தக பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக் கொள்ள வழி ஏற்படும்.
அவற்றின் பயணிகளுக்குக் கூடுதல் விருப்ப உரிமைகள், வாய்ப்புகள் கிடைக்கும். பயண அனுபவமும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நவம்பர் 29ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான, தனிமை உத்தரவில்லா சிறப்புப் பயணத் திட்டம் தொடங்குகிறது.
அதற்குத் தோதாக இந்தக் குறிப்பு கையெழுத்தாகி உள்ளது.
எஸ்ஐஏ, கருடா இந்தோனீசியா நிறுவனங்கள் சிங்கப்பூருக்கும் பாலி, ஜகார்த்தா, சுரபாயாவுக்கும் இடையிலான தங்கள் விமானத் தொடர்பு உடன்பாட்டை அக்டோபர் 1ஆம் தேதி மறுபடியும் தொடங்கின.
அதே நாளன்று கருடா நிறுவனம், லண்டனுக்கான எஸ்ஐஏவின் சேவைகளில் தனது வர்த்தக விமானத் தொடர்புக் கட்டமைப்பைத் தொடங்கியது.
வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து மும்பைக்கான எஸ்ஐஏ விமானங்களில் தனது சேவை ஏற்பாட்டை கருடா நிறுவனம் தொடங்கும்.
இந்த இரண்டு நிறுவனங்களின் கட்டமைப்புகளில் உள்ள இடங்களுக்கு மேலும் விமானத் தொடர்பு பங்காளித்துவ உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு வழிகள் பற்றி ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.