கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்குத் தொற்று ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு.
அதோடு மட்டுமின்றி சில கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அவருடைய குழந்தைக்கும் கொவிட்-19 கிருமி தொற்றக்கூடிய வாய்ப்பும் உண்டு என்று வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
என்றாலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு.
அதோடு, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அவருடைய குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் விளக்கி உள்ளனர்.
மருத்துவ வல்லுநர்கள் நேற்று நடந்த இணையக் கருத்தரங்கில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆபத்து ஏதாவது ஏற்படுமோ என்று நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், நேற்றைய கருத்தரங்கு நடந்தது.
தாயின் உடலில் இருந்து தொப்புள்கொடி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்குப் பரவும் வாய்ப்பு உண்டு என்று பல வெளிநாட்டு ஆய்வுகளும் தெரிவித்துள்ளதை வல்லுநர்கள் நேற்றைய கருத்தரங்கில் சுட்டிக்காட்டினர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். அது கிருமி பரவாமல் தடுக்கும் ஆற்றலை குழந்தைக்கு கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட்-19 தொற்றினால் குறைபிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

