மீண்டும் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில்

மீண்டும் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில்

3 mins read
a4b21051-520c-4331-97cc-d6d13cbd351a
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (இடது), சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இருவரும் நேற்று இஸ்தானாவில் சந்தித்தனர். அப்போது மலேசியப் பிரதமர் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆர்க்கிட் மலர் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியப் பிரதமர் யோசனைக்கு வரவேற்பு; இரு நாட்டு போக்குவரத்து அமைச்சுகளும் விவாதிக்கும் என பிரதமர் லீ அறிவிப்பு

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான பல்­வேறு ஒத்­து­ழைப்பு திட்­டங்­கள் குறித்து இரு நாட்டு தலை­வர்­களும் நேற்று சிங்கப்பூரில் விவா­தித்­த­னர்.

சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ர­பூர்வ வருகை மேற்­கொண்ட மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பு­டன் பிர­த­மர் லீ சியன் லூங் பேச்சு நடத்­தி­னார். அதற்குப் பிறகு இரு­வ­ரும் சேர்ந்து செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­த­னர்.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் துரித ரயில் திட்­டம் உள்­ளிட்ட பல துறை­களி­லும் ஒத்­து­ழைப்­பது பற்றி தாங்கள் விவா­தித்­த­தாக பிர­த­மர் திரு லீ கூறி­னார். இந்­தத் திட்­டம் தொடர்­பில் கட்டு­மா­னப் பணி­கள் நடந்து வரு­வ­தா­க­வும் 2026 முடி­வில் பய­ணச் சேவை தொடங்­கும் என்று தான் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் அதி­வேக ரயில் திட்­டம் பற்றி தாங்­கள் விவா­தித்­த­தா­க­வும் திரு லீ கூறி­னார். இந்­தத் திட்­டம் முடித்­துக்­கொள்­ளப்­பட்டு இருக்­கிறது.

இருந்­தா­லும் இதன் தொடர்­பிலான பேச்­சு­வார்த்­தையை மீண்டும் தொடங்­க­லாம் என்று மலே­சிய பிர­த­மர் யோசனை கூறினார்.

இந்த அதிவேக ரயில் திட்­டம் பற்றி மலே­சி­யா­வி­டம் இருந்து புதிய யோச­னை­களை சிங்­கப்­பூர் வர­வேற்­கிறது என்­றும் இது பற்றி இரு நாட்டு போக்­கு­வ­ரத்து அமைச்­சு­களும் விவா­திக்கும் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

ஜோகூ­ரில் இஸ்­கந்­தர் மலே­சியா பொரு­ளி­யல் வளா­கத்தை அமைப்­பதற்கு சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆதரவு அளிப்­ப­தா­க­வும் திரு லீ கூறி­னார். தனிப்­பட்ட முறை­யில் மலே­சியப் பிர­த­மரைச் சந்­தித்து இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட வலு­வான இருதரப்பு உறவை மறு­உறு­திப்­ப­டுத்­திக் கொண்­டது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக திரு லீ கூறினார். ­

அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் மலே­சி­யப் பிர­த­மரை வர­வேற்று ஓய்வுத்தளச் சந்­திப்பு கூட்­டம் நடத்த தான் ஆர்­வ­மாக இருப்­ப­தா­க­வும் திரு லீ கூறினார். இஸ்­தா­னா­வில் மலே­சி­யப் பிர­த­ம­ருக்குச் சிறப்பான வர­வேற்புடன் பகல் விருந்­தளித்­தும் சிறப்­பிக்­கப்­பட்­டது.

விருந்­தில் சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் விரும்பும் கார நண்டு கறி, ரோஜாக் உள்­ளிட்ட பல­வும் இடம்­பெற்று இருந்­தன.

என்­றா­லும் டுரி­யான் பழங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று மலே­சி­யப் பிர­த­ம­ருக்கு விருந்­த­ளித்­துச் சிறப்­பித்த சிங்­கப்­பூர் பிர­த­மர் திரு லீ தெரி­வித்­தார். இந்த உணவு இரு நாடு களும் அணுக்கமாக ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் திரு லீ குறிப் பிட்டார்.

மலே­சிய பிர­த­மரைப் பெரு­மைப்­படுத்­தும் வகை­யில் அவ­ரின் பெயர் சூட்­டப்­பட்ட இளஞ்­சி­வப்­பு­நிற ஆர்க்­கிட் மலர் அவ­ருக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது. திரு இஸ்மாயில் அதி­பர் ஹலிமா யாக்­கோப்பை நேற்றுச் சந்­தித்­தார்.

இத­னி­டையே, செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய மலே­சி­யப் பிர­த­மர், சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வின் பல நகர்­க­ளுக்­கும் இடை­யில் விமா­னத் தொடர்­பு­க­ளைத் தொடங்­கும் சாத்­தி­யம் பற்றி சிங்­கப்­பூர் பிர­த­ம­ரு­டன் தான் விவா­தித்­த­தா­கக் கூறி­னார்.

இதன்­ தொ­டர்­பில் இரு நாட்டு அதி­கா­ரி­களும் பேச்­சு­வார்த்தை தொடங்க வேண்­டும் என்று தானும் திரு லீயும் முடிவு செய்து இருப்­ப­தா­க­வும் மியன்­மார் பற்றி தாங்­கள் பேசி­ய­தா­க­வும் திரு இஸ்­மா­யில் கூறினார்.