சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தனிமை உத்தரவில்லா தரைப் பயணம் (விடிஎல்) நேற்று சுமுகமாகத் தொடங்கியது.
முதல் நாளான நேற்று ஏறத்தாழ சிங்கப்பூரில் இருந்து 1,440 பேர் மலேசியா செல்வார்கள் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
அந்த விடிஎல் பயண ஏற்பாட்டின் முதல்கட்டத்தின்படி குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
என்றாலும் மலேசிய நீண்டகால அனுமதி அட்டை வைத்திருக்கவில்லை என்பதால் நேற்று ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்த இதர இரண்டு பயணிகள் வரவில்லை. இவற்றைத் தவிர மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லாமல் நேற்று முதல்நாள் பயணம் இடம்பெற்றதாகத் தெரியவந்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூர்-மலேசிய தரை எல்லை சென்ற ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மூடப்பட்டது.
அதனால் மலேசியாவில் உள்ள தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கப்பூரில் முடங்கிவிட்டனர்.
தங்களுடைய நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நேற்று வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சி, பரபரப்பு, உற்சாகத்துடன் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தத் திட்டத்தின்கீழ் நேற்று மலேசியா புறப்பட்ட பயணிகளில் ஒருவரான திருவாட்டி டான் ஹுய் யாங் என்ற ஆசிரியை, இன்று ஜோகூர் பாருவில் தன் குடும்பத்தாருடன் தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
"இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. பரபரப்பு அடங்கவில்லை. எப்போது பொழுது விடியும் என்று காத்து கிடந்தேன்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டைவிட்டு புறப்பட்டு உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையத்தில் 6.50 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டேன்," என்று அவர் கூறினார்.
இவரைப் போலவே பலரும் நேற்று உற்சாகத்துடன் முன்னதாகவே பேருந்து முனையத்திற்குச் சென்று மலேசியா புறப்பட்டனர்.
இந்த ஏற்பாட்டின்கீழ் பயணம் செய்ய பலரும் படாதபாடுபட்டு முன்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடிஎல் ஏற்பாட்டின்கீழ் பேருந்துச் சேவையை வழங்க இரண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.
'டிரான்ஸ்டார் டிராவல்', 'ஹாண்டல் இண்டா' என்ற அந்த இரண்டு நிறுவனங்களும் அன்றாடம் 64 விடிஎல் சேவையை நடத்தும். ஒரு பேருந்தில் 45 பேருக்கு இடமுண்டு.
ஜோகூர் பாருவில் இருந்து வேறு பேருந்துகளைப் பிடித்து மலேசியாவின் இதர மாநிலங்களுக்குச் செல்வோரும் நேற்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டனர்.
ஜோகூரில் தரையிறங்கியதும் பயணிகள் தற்காலிக நிலையம் ஒன்றில் ஏர்ஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
தொற்று இருப்பதாகத் தெரியவந்தால் அவர்கள் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அதில் தொற்று உறுதியானால் 10 நாள் தனிமையில் வைக்கப்படுவார்கள். அப்படி வைக்கப்படுவோர் வீட்டில் இருந்து குணமடையவேண்டி இருக்கும்.
பதாகை வரவேற்பு
விடிஎல் பயண ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூரில் இருந்து பேருந்துகளில் புறப்பட்ட பயணிகள் நேற்றுக் காலை ஜோகூர் பாருவில் மிக உற்சாகமாக தரையிறங்கினர்.
முதலாவது பேருந்து காலை 9.15 மணிக்கு ஜோகூர் பாரு லர்கின் முனையத்திற்குச் சென்றது. தாயகத்திற்குத் திரும்புவோரே வருக என்று கூறிய பதாகை அவர்களை வரவேற்றது.
இதனிடையே, விடிஎல் பேருந்தில் நேற்று ஜோகூர் பாரு சென்றவர்களில் ஒருவரான திரு கவின் ராஜ் குணாளன், 24, என்பவர், விடிஎல் நடைமுறை சரளமாக இருந்தது என்றார்.
திரு குணாளன் ஆறு மாதமாக மலேசியா செல்லவில்லை. அங்கு அவர் மூன்று மாதம் தங்கி இருந்துவிட்டு பிறகு சிங்கப்பூர் திரும்புவார்.

