புதிய தொற்று 1,000க்கும் குறைவு
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 747 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து கொரோனா கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 262,383 ஆகியது.
செப்டம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு முதன்முதலாக தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமைதான் 1,000க்கும் கீழ் குறைந்தது. வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.69ஆக இருந்தது. இந்த அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 16 நாட்களாக 1க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. புதிய வாராந்திர தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை இது காட்டுகிறது.
கொரோனா காரணமாக 11 பேர் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 67 முதல் 98 வரை. மாண்டவர்கள் அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கொவிட்-19 மொத்த மரண எண்ணிக்கை 701 ஆகி உள்ளது. புதிதாகக் கிருமி தொற்றியோரில் 719 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 135 பேருக்கு வயது 60 மற்றும் அதற்கும் அதிகம். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் 25 பேர்.
மூன்று பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவு பயனீட்டு அளவு ஞாயிறு அன்று 57.4% ஆக இருந்தது.
ஆறாவது மாடி வீட்டில் தீ: இரு சிறார்கள் உட்பட நால்வர் பாதிப்பு
செம்பவாங் டிரைவில் உள்ள ஒரு புளோக்கின் ஆறாவது மாடி வீடு ஒன்றில் நேற்று விடிகாலை நேரத்தில் மூண்ட தீயில் பாதிக்கப்பட்ட இரு சிறார்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டின் வசிப்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மூலம் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட புலன்விசாரணை மூலம் தெரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தண்ணீரையும் நுரையையும் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு சென்றதற்கு முன்பாகவே தீ மூண்ட வீட்டில் இருந்து ஆறு பேர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். அவர்களில் நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் ஐந்து வயதுக்கும் குறைந்த அந்த இரண்டு சிறார்களும் அடங்குவர்.
இதர இரண்டு பேர் காயமடைந்து இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தற்காப்புப் படை கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேரை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, தாங்கள் அதிகாலை சுமார் 3.30 மணிக்கு வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அந்தப் புளோக்கின் குடியிருப்பாளர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
3 மத்திய கிழக்கு நாடுகளுடனான விடிஎல் திட்டம் ஒத்திவைப்பு
கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் கூடிய தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான தனிமை உத்தரவில்லா விமானப் பயணத் திட்டம் (விடிஎல்) தள்ளிப்போடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஓமிக்ரான் தொற்று தலைதூக்குவதால் எல்லை கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும்.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் இறக்குமதியாகி பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இது இடம்பெறுகிறது என்று அமைச்சு குறிப்பிட்டுள்து. எல்லை மறுபரிசீலனை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் கூடிய விடிஎல் விமானப் பயணத் திட்டம் இடம்பெறாது என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இந்த மூன்று நாடுகளோடும் கூடிய விடிஎல் திட்டம் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்க இருந்தது. ஓமிக்ரான் கிருமித்தொற்று காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து மைய தொடர்பாக அந்த மத்திய கிழக்கு நாடுகள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்து உள்ளது.
உருமாறிய கொவிட்-19 ஓமிக்ரான் கிருமி கவலை தரும் ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. சிங்கப்பூரில் இதுவரை அந்தக் கிருமித்தொற்று இல்லை. ஓமிக்ரான் பரவுவதால் பல நாடுகளும் எல்லைக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

