சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான தனிமை உத்தரவில்லா தரைவழி பயணத்திட்டம் நேற்றுத் தொடங்கியது.
அதன்படி மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட முதல் பேருந்தில் நால்வர் ஏறினர். ஆனால் மூன்று பேர் மட்டுமே சிங்கப்பூர் வந்தனர்.
'ஹண்டால் இண்டா' என்ற மலேசிய நிறுவனம் நடத்தும் அந்தப் பேருந்து தாதமதாக காலை 9.48 மணிக்கு குவீன் ஸ்திரீட் பேருந்து முனையத்திற்கு வந்தது. இரண்டாவது பேருந்து காலை 9.51 மணிக்கு வந்தது. அதில் ஒரே ஒரு பயணி மட்டும் வந்தார்.
இதனிடையே, 'டிரான்ஸ்டார் டிராவல்' என்ற வேறு ஒரு நிறுவனம் நடத்தும் பேருந்து உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையத்திறக்கு பிற்பகல் 12.40க்கு வர இருந்தது. ஆனால் மூன்று மணி நேரம் கழித்தும் அது வரவில்லை.
பேருந்தில் வந்தவர்களை வரவேற்க குடும்பத்தினர், நண்பர்கள் யாரும் செல்லவில்லை.
இதனிடையே, முதலாவது பேருந்தில் சிங்கப்பூர் வந்தவர்களில் ஒருவரான திருவாட்டி ரேணி லூய், 29, என்பவர், தன்னுடன் பேருந்தில் வந்தவர்களில் ஒருவர் ஜோகூர்பாரு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவரை ஓர் அதிகாரி வேறு ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
இந்த மாது தன் தந்தையைப் பார்த்து வருவதற்காக மூன்று வாரங்களுக்கு முன் மலேசியா சென்று இருந்தார்.
திரு அலெக்ஸ் லீ, 40, என்பவர் மட்டும் இரண்டாவது பேருந்தில் தனியாக வந்தார். ஜோகூர் பாருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்ட பேருந்து தாமதமாக சிங்கப்பூர் வந்தது என்றார் திரு லீ.
ஜோகூர் பாரு சுங்கச்சாவடியில் சுமார் 45 நிமிடம் காத்திருக்க வேண்டி இருந்தது என்றும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
திரு லீ, சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு மலேசியா சென்று தன் மனைவி, பிள்ளைகளை இரண்டு வாரங்களுக்கு முன்புதான் முதன்முதலாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் பயணம் மேற்கொள்ள விடிஎல் பயணத் திட்டம் அனுமதிக்கிறது.
என்றாலும் இத்திட்டத்தின்படி பயணம் மேற்கொண்டு மலேசியாவில் இருந்து இங்கு வருவோர் 'எஸ்ஜி வருகை அட்டை' என்ற தகவல் ஆவணத் தொகுப்பை மூன்று நாட்கள் முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும். அதில் பயணியின் சுகாதார விவரங்கள் இருக்கும்.
இவ்வேளையில், குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து நடைமுறைகளை அது மேம்படுத்தும் என்றும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் அதிகாரியான சூப்ரின்டெண்டன்ட் தோங் வெய்ஜி தெரிவித்தார்.

