கொவிட்-19 தடுப்பூசி பற்றி தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட இருவருக்கு 'பொஃப்மா' எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திருத்தம் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 'உங்களை புறக்கணிக்கும் சமூகத்தில் பங்கேற்காதீர்கள்' என்ற தலைப்பில் தமது வலைப் பதிவில் உள்ளூர் கட்டுரையாளரான சியா கிட் சன் தமது கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான கோ மெங் செங் தமது பதிவில் பகிர்ந்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணையப் பக்கத்திலும் சமூக ஊடகத்திலும் பதிவான கருத்து களுக்கு மேலே திருத்த உத்தரவு எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
"குறிப்பாக தடுப்பூசி இயக்கம் நடந்துகொண்டிருக்கும்போது இத்தகைய தவறான தகவல்களுக்கு திருத்தம் வெளியிடுவது அவசியம்," என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
திரு சியா என்பவர் அண்மைய காலத்தில் இதுவரை உருவாக்கப்பட்டதில் கொவிட்-19 தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை என்று கூறியிருந்தார்.
இதற்கு 'Vaers' எனும் தடுப்பூசி விளைவு நிகழ்வு அறிக்கை முறையின் புள்ளிவிவரங்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து தடுப்பூசிகளையும் சேர்த்தால் கூட அதைவிட தற்போதைய தடுப்பூசிகள் தீவிரமான காயத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என்ற அந்த அமைப்பு கூறியிருந்தது.
"இது பொய்," என்று கூறிய சுகாதார அமைச்சு, தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் வலுவானது என்பதை உலகம் முழுவதும் உள்ள மதிப்புமிக்க அறிவியல் அறிஞர்கள் மதிப்பிட்டு அங்கீகரித்து உள்ளனர் என்று குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் இத்தகைய தடுப்பூசிகளை சுகாதார அறிவியல் ஆணையமும் கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழுவும் மதிப்பிட்டுள்ளன.
சென்ற அக்டோபர் 31 வரையில் தடுப்பூசிகளால் 0.006 விழுக்காடு மட்டுமே கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது.
மரணம் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.