புதிய ஓமிக்ரான் கிருமி தொற்றி இருப்பதாக யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் அவர் தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்.
திரும்பத் திரும்ப பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்று மருத்துவர் களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை அவர் தனிமையில் இருப்பார்.
வீட்டில் இருந்து குணம் அடையும் திட்டத்தில் அவர் வைக்கப்படமாட்டார் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். தொற்று இருப்பதாக உறுதியாக தெரியவந்தால் தடமறியும் நடைமுறை முற்றிலும் அமலாகும். நோயாளியுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்கள் குறிப்பிட்ட இடங்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அவர் களுக்கு அனுமதி இராது.
கிருமி தொற்றிய ஒவ்வொருவருக்கும் தனிமைக்காலம் தொடக்கத்திலும் முடிவிலும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.
மூக்கு திரவப் பரிசோதனை மூலம் ஓமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகள் கடுமையாக இருக்கும்.
கொவிட்-19 தொற்று முதன் முதலில் தலைகாட்டியபோது நடப்புக்கு வந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நேற்று செய்தியாளர்களிடம் திரு ஓங் தெரிவித்தார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு ஓங், 'தெர்மோஃபிஷர்' என்ற நிறுவனம் நடத்தும் குறிப்பிட்ட ஒரு பிசிஆர் பரிசோதனை, ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துவிடும் என்று தெரிவித்தார்.
அந்தப் பரிசோதனையைப் பொறுத்தவரை சுற்றுப் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
அந்தப் பரிசோதனையில் குறை இருக்கலாம் என்றாலும் சிங்கப்பூர் வேகமாகச் செயல்பட்டு பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளை அமலாக்க அதனால் வழி ஏற்படும் என்றும் அமைச்சர் திரு ஓங் கூறினார்.
அதாவது, சிங்கப்பூரில் தனிப்பட்ட இரண்டு வகை கிருமித்தொற்று இருக்கிறது என்ற அடிப்படையில், இரண்டு வகை சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகள் இருக்கும். ஒன்று டெல்டா கிருமிக்கு. மற்றொன்று ஓமிக்ரான் கிருமிக்கு என்று தெரிவித்த திரு ஓங், இதை தெர்மோஃபிஷர் பிசிஆர் பரிசோதனை முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார்.

