பல்வேறு திறன்களைக் கொண்ட குழுப் பணியும் அடிப்படை ஆராய்ச்சியும் அறிவியல் துறையின் உன்னதம் தொடர அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பணிகள் கொள்ளைநோய் நெருக்கடி சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவை என்றார் அவர். ஏ ஸ்டார் அறிவியல் துறை மாநாட்டில் பங்கேற்று திரு ஹெங் உரையாற்றினார்.
ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா மாநாட்டு மண்டபத்தில் நேற்று இம்மாநாடு நடைபெற்றது.
ஏ ஸ்டார் நோய் கண்டறிதல் வளர்ச்சி மையம் உயிர்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விரைவாக பரிசோதனைக் கருவிகளை உருவாக்கிய சம்பவத்தை அவர் நினைகூர்ந்து பாராட்டினார்.
"தனித்து அறிவியல் விந்தைகளைப் படைப்பது என்பது எப்போதாவது நிகழ்வதுண்டு. ஆயினும் பலதரப்பட்ட குழுக்களின் ஒன்றிணைந்த பணிகளும் முந்திய தலைமுறை அறிவியலாளர்கள் உருவாக்கிய செயல்களின் அடிப்படையிலான பணிகளும் இணைந்து திருப்புமுனையை ஏற்படுத்துவது அடிக்கடி நிகழக்கூடியது.
"இத்தகைய பலதரப்பட்ட அணுகுமுறை கொள்ளைநோய் நெருக்கடிக்கும் அப்பால் பருவநிலை மாற்றம், மூப்படையும் மக்கள்தொகை போன்ற உலகின் கடினமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணக்கூடியது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய திறன்
களால் அடிக்கடி புத்தாக்கம் நிகழ்வதும் உண்டு," என்றார் துணைப் பிரதமர்.

