மருத்துவ அறக்கட்டளை நிதி எனப்படும் 'மெடிஃபண்ட்' திட்டம் வழி கடந்த நிதியாண்டில் மொத்தம் $156.9 மில்லியன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் வசதிகுறைந்த சிங்கப்பூரர்களுக்குத் தங்களின் மருத்துவச் செலவுகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டது.
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட தொகை $2.2 மில்லியன் குறைவு என்று கூறப்பட்டது. கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் பொதுச் சுகாதார பராமரிப்பு நிலையங்கள், இடைக்கால, நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு நோயாளி வருகை குறைந்திருந்ததால் உதவி நாடியவர் எண்ணிக்கையில் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5.3% குறைவு.
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களை நாடிய நோயாளிகளுக்கு $120 மில்லியனுக்கும் மேற்பட்ட உதவித் தொகை வழங்கப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் இத்தொகை ஏறத்தாழ $123 மில்லியனாக இருந்தது.
இடைக்கால மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு வசதிகளை நாடிய நோயாளிகளுக்கு மொத்தம் $36.6 மில்லியன் உதவி வழங்கப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் பதிவான $36.2 மில்லியனைக் காட்டிலும் இது அதிகமாகும்.
ஒவ்வொரு உள்நோயாளி சிகிச்சைக்கும் சராசரியாக $841 மதிப்பிலான 'மெடிஃபண்ட்' உதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு வெளிநோயாளி சிகிச்சைக்காக சராசரியாக $93 வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதிஉதவி, காப்புறுதி, 'மெடிசேவ்' கழிவுகளுக்குப் பின்னும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ள வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு மெடிஃபண்ட் துணைபுரிகிறது.
மூத்தோர்க்கு 'மெடிஃபண்ட் சில்வர்', இளம் பிள்ளைகளுக்கு 'மெடிஃபண்ட் ஜூனியர்' ஆகிய வெவ்வேறு திட்டங்கள் உள்ளன.

