மத்திய சேமநிதி உறுப்பினர்கள் தங்கள் மசேநிதி கணக்குகளில் இவ்வாண்டு இதுவரை நிரப்பிய கூடுதல் பணம் இதுவரை $4 பில்லியனைத் தாண்டியுள்ளது.
இது கடந்தாண்டு சாதனை அளவாக நிரப்பப்பட்ட கூடுதல் தொகையான $3 பில்லியனைவிட அதிகம்.
மத்திய சேமநிதிக் கழகம் இன்று (டிசம்பர் 1) இதைத் தெரிவித்தது.
ஓய்வுக்காலக் கணக்கில் கூடுதல் பணம் நிரப்பும் திட்டத்தில் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை 220,000க்கும் அதிகமான மசேநிதி உறுப்பினர்கள் கூடுதல் நிரப்புத்தொகையைச் செலுத்தியதாகக் கழகம் கூறியது.
இவ்வாறு கூடுதல் பணம் நிரப்பியவர்களில் 127,000 பேர் முதன்முறையாக ஓய்வுக்காலக் கணக்குகளில் பணம் நிரப்பினர்.
"இவ்வாண்டு முதல்முறை கூடுதல் பணம் நிரப்பியவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் பணம் நிரப்பியவர்களின் எண்ணிக்கையைவிட இரட்டிப்பாகியுள்ளது. இவர்களில் இரண்டில் ஒருவர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள்," என்று மசேநிதி கழகம் கூறியது.
கடந்த ஆண்டு சுமார் 140,00 மசேநிதி உறுப்பினர்கள் $3 பில்லியனை கூடுதல் தொகையாக ஓய்வுக்காலக் கணக்குகளில் நிரப்பினர். இத்திட்டத்தில் மசேநிதி உறுப்பினர்கள் தங்களது அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் ஓய்வுக்கால கணக்குகளில் ரொக்கப் பணத்தையோ கூடுதல் பணத்தை நிரப்பலாம். கூடுதல் பணம், ரொக்கமாக அல்லது மசேநிதி கணக்குகளில் உள்ள தொகையாக இருக்கலாம். மத்திய சேம நிதியின் இணயப்பக்கத்துக்கு அல்லது அதன் செயலிக்குச் சென்று மின்னியல் முறையில், வசதியாகவும் எளிதாகவும் கூடுதல் நிரப்புத்தொகையைச் செலுத்தலாம் என்று மத்திய சேமநிதிக் கழகம் கூறியது.
2021ஆம் ஆண்டு இறுதிக்குள் மத்திய சேம நிதிக் கணக்கை நிரப்புபவர்கள் அடுத்த ஆண்டுக்கான வருமானவரி மதிப்பீட்டில் $14,000 வரையிலான தொகைக்கு வரித்தள்ளுபடியைப் பெறலாம்.

