வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை எட்டும் நாட்பட்ட நோயாளிகளை அவர்களது இறுதிக்காலத்தை மகிழ்ச்சியுடன் களிக்கும் வகையில், அவர்களுக்கான ஊட்ரம் சமூக மருத்துவமனையின் அந்திமகால பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் ஆரோக்கிய நீரூற்றுக் குளியல் வசதி, மாஜோங், செஸ் போன்ற அட்டைப்பலகைகளைக் கொண்ட விளையாட்டுகளுக்கான அறை, மதுக்கூடம் போன்ற வசதிகளுடன் வாரந்தோறும் மகிழ்ச்சி நேர நிகழ்வுகளும் இடம்பெறும்.
ஓயெசிஸ்@ஊட்ரமில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பகல்நேர அந்திமகால பராமரிப்பு நிலையம் திரையரங்கு உள்ளிட்ட பல வசதிகளுடன் அழகுற மெருகூட்டப்பட்டுள்ளது. வசதியாகச் சாய்ந்துகொண்டு படம் பார்க்கும் வகையில் மென்மையான இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு கூடைப்பந்துத் திடல்களின் அளவைக் கொண்ட ஏறத்தாழ 900 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது இந்த அந்திமகால பராமரிப்பு நிலையம். இந்த நிலையத்தில் இறுதிக்காலத்தைக் கழிக்கும் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான நல்ல அனுபவத்தைத் தரும் வகையிலான இந்த ஏற்பாட்டுக்கு ஹெச்.சி.ஏ. அந்திமகால பராமரிப்பு மற்றும் வள்ளல் லியன் அறநிறுவனம் ஆகியவை இணைந்து $2.47 மில்லியன் தொகையை அளித்துள்ளன.
சிராங்கூன், மார்சிலிங் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள வசதிகளுடன் கூடிய அந்திமகால பராமரிப்பு இல்லத்தைத் தொடர்ந்து மூன்றாவதாக இந்த நிலையம் அமையும். அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த பராமரிப்பு நிலையம் 2022, ஜனவரியில் அதிகாரபூர்வ திறப்பு விழா காணும்.
இந்தப் புதிய நிலையம் மற்ற நிலையங்களைப் போல் அல்லாது, அதாவது நோயாளிகள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பின்பற்றத் தேவையில்லை. அவர்களுக்கு எப்போது எந்த நடவடிக்கையில் பங்குகொள்ள வேண்டுமோ அதைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
மொத்தம் 45 பெரியவர்களும் மூன்று குழந்தைப் பருவ நோயாளிகளையும் கொள்ளும் இந்த நிலையம் தற்போதைய தொற்றுச்சூழலில் 32 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2022 ஜனவரி முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த நிலையம் இயங்கும்.

