உடலுறவுகொள்ள 11 பெண்களை ஏமாற்றிய ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
அந்தச் சிறைத் தண்டனையைக் குறைக்குமாறு மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றத்தின் கடுமையை கவனத்தில் கொண்டு ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனையை இரட்டிப்புக்கும் அதிகமாக்கி 8 ஆண்டுகள், 4 நான்கு மாதச் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பளித்தது.
டி பீர்ஸ் வோங் டியான் ஜுன் என்ற 40 வயது ஆடவர், வயதான செல்வந்தர்களை அறிமுகப்படுத்துவதாகவும் தம்மை ஒரு முகவர் என்றும் கூறிக்கொண்டு 18 முதல் 24 வயதுடைய பெண்களை ஏமாற்றியுள்ளார்.
அத்துடன், அந்தப் பெண்களுக்குச் செல்வந்தர்களிடம் தொடர்பு ஏற்படுத்துவதற்குமுன் தம்மிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களை பரிந்துரை செய்யலாமா வேண்டாமா என்று என்னால் கணிக்க முடியும் என்று கூறி அவர்களை ஏமாற்றியுள்ளார். குறைவான தண்டனை பெறும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வோங் அளித்த உளநோய் குறித்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
பத்து மாதங்களாக இவர் நேர்த்தியான முறையில் லோகோண்டோ என்னும் இணையத்தளத்தில் 'வயதான செல்வந்தர்களின் துணைக்குப் பெண்கள் தேவை' என்று விளம்பரம் கொடுத்திருந்தார். 2015 ஏப்ரல் மாதத்திற்கும் 2016 ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் குறைந்தபட்சம் 11 பெண்கள் இவரது விளம்பரத்திற்குப் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உங்களின் சேவைக்காக அவர்கள் S$8,000 முதல் $20,000 வரை கொடுப்பார்கள் என்று அந்தப் பெண்களிடம் ஆசைவார்த்தை பேசி வோங் ஏமாற்றியுள்ளார்.

