என்டியுசி-யு கேர் நிதியின் ஒரு பகுதியாக இவ்வாண்டு திரட்டப்பட்டுள்ள ஏறத்தாழ $8 மில்லியனால் குறைந்த வருமானம் ஈட்டும் கிட்டத்தட்ட 35,000 தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் பலன் அடைவர். அவர்களில் 15,000 சிறுவர்களும் அடங்கு வர்.
கடந்த ஆண்டு திரட்டப்பட்ட $7.7 மில்லியனைவிட இது அதிகம் என்று என்டியுசி தெரிவித்தது. யு கேர் நிதி 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலகளாவிய நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு உதவ இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு தொழிற்சங்கங்கள், சங்கங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியோடு குறைந்த வருமானக் குடும்பங்
களுக்கு $113 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதித் திரட்டுக்குத் தேவையான நன்கொடையை வழங்கியோருக்கு நன்றி நல்கும் நிகழ்ச்சி யில் என்டியுசி கேர் அண்ட் ஷேர் பிரிவின் இயக்குநர் திரு ஸைனல் சபாரி நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசினார்.
"நமது ஊழியர்களுக்கு இவ்வாண்டு தொடர்ந்து சவால்மிக்கதாக இருந்து வருகிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் ஈட்டுவோரும் கொவிட்-19 நெருக்கடிநிலையால் வருமானம் பாதிக்கப்பட்டவர்களும் கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றனர்," என்றார் திரு ஸைனல் சபாரி.
இந்தச் சவால்மிக்க காலகட்டத்தில் உதவி தேவைப்படுவோருக்கு போதுமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய என்டியுசி புதிய வாய்ப்புகளையும் நிதி திரட்டும் முறைகளையும் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
அவற்றுள் ஒன்று இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'புளோக்சேன் ஃபார் குட் இனிஷியேட்டிவ்' எனும் அறப்பணி ஏலக்குத்தகையாகும். அதன்மூலம் $400,000க்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. $250,000 திரட்டப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
மற்றொரு நிதி திரட்டு முயற்சி யின் மூலம் $20,000 திரட்டப்பட்டது.
14,000 சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் மளிகைப் பொருள்கள் வாங்க ஒவ்வொருவருக்கும் தலா $100 வரை பெறுமானமுள்ள மின் பற்றுச்சீட்டுகள் என்டியுசி கேர் நிதியின்கீழ் வழங்கப்பட்டன.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளை
களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு பிள்ளை அடிப்படையில் கூடுதலாக $100 பெறுமானமுள்ள மின்பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
இவ்வாண்டின் திட்டம் மூலம் பலன் அடைந்தோரில் திருவாட்டி முத்துலட்சுமியின் பிள்ளைகளும் அடங்குவர். 2019ஆம் ஆண்டில் தமது கணவர் இறந்ததை அடுத்து, தமது மூன்று பிள்ளைகளையும் தனியாக இருந்து வளர்த்து வருகிறார் 38 வயது திருவாட்டி முத்து லட்சுமி. அவரது பிள்ளைகள் 2 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்டவர்கள். காசாளராகப் பணி
புரியும் திருவாட்டி முத்துலட்சுமி 2015ஆம் ஆண்டிலிருந்து என்டியுசியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
தமது கணவரின் மரணம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
"எனது கணவரின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்தேன். உறவினர்கள் நீட்டிய ஆதரவுக்கரம் எனக்குக் கைகொடுத்தது. ஆனால் உறவினர்களால் ஒரு தந்தையின் இடத்தை நிரப்ப முடியாது," என்றார் திருவாட்டி முத்துலட்சுமி.
தமக்கு வழங்கப்பட்ட மின்பற்றுச்சீட்டுகள் தமது நிதிச் சுமையைச் சற்று இறக்கி வைத்ததாக அவர் கூறினார்.
"எனது பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்களைப்
பள்ளிகள் வழங்குகின்றன. எனக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி எழுது பொருள்கள், துணைப்பாட நூல்கள் போன்றவற்றை என்னால் வாங்க முடிந்தது. பள்ளிக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி, பேரங்காடிக்குச் செல்லும்போது என் பிள்ளை
களுக்கு நொறுக்குத் தீனி வாங்க முடிகிறது. இதுபோன்று வாழ்வில் கிடைக்கும் சிறுசிறு இன்பங்களைப் பெற பற்றுச்சீட்டுகள் எங்களுக்குப் பேருதவியாக இருக்கின்றன," என்று கூறிய திருவாட்டி முத்துலட்சுமி தமது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.