முதன்முறையாக நடைபெறும் ஆசியான்-ரஷ்யா கடல்துறைப் பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஏவுகணைப் போர்க் கப்பலான 'ஆர்எஸ்எஸ் விகர்' பங்கேற்றுள்ளது. இப்பயிற்சி இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கியது.
இந்த மூன்று நாள் பயிற்சி வடக்கு சுமத்ராவுக்கு வடக்கே உள்ள சபாங் தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இதர கப்பல்களும் கவனிப்பாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியில் சிங்கப்பூர் பங்கேற்பது, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்கு (ADMM-Plus) நாட்டின் ஆதரவையும், திறந்த, உள்ளடக்கிய வட்டார பாதுகாப்புக் கட்டமைப்பை நிலைநிறுத்து வதற்கான அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என்று நேற்று தற்காப்பு அமைச்சு கூறியது.
ADMM-Plus என்பது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் எட்டு பங்காளி நாடுகளுக்கு இடையிலான வருடாந்திர கூட்டமாகும். ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவைதான் அந்த எட்டு பங்காளிகள்.
கடல் பயிற்சியில் பங்கேற்ற கடற்படை கப்பல்கள், தகவல் தொடர்பு, திறமையாக நகர்தல், தேடல் மீட்பு பயிற்சி, உருவகப்படுத்தப்பட்ட கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் கடல் பாதுகாப்புப் பயிற்சி ஆகியவற்றை நடத்தின.
ஆசியான் அனைத்துலகத் தொடர்பு அதிகாரிகள் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தகவல் இணைவு மையத்துடன் இணைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் பயிற்சிகளை ஒருங்கிணைக்க ஐரிஸ் என அழைக்கப்படும் நிகழ்நேர தகவல்-பகிர்வு முறையைப் பயன்படுத்தினர். இணைய அடிப்படையிலான ஐரிஸ் தளம் விரைவான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அனு மதிக்கிறது. இது, கடலில் திட்டமிடப்படாத சந்திப்புகளுக்கான குறியீடு, இந்தப் பயிற்சியில் கப்பல்களுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டது. 2017ல் ADMM-Plus கடற்படைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கடற் படைக் குறியீடு, பலதரப்பு பயிற்சிகள் அல்லது செயல்பாடுகளில் மொழித் தடைகளைத் தணிக்கும் கடிதங்கள், எண்கள் தொடர்பு நெறிமுறையைக் குறிப்பிடுகிறது. பங்கேற்கும் அனைத்துக் கப்பல்களின் கடல்பவனியுடன் இன்று இப்பயிற்சி முடிவடையும்.
"நமது முக்கிய கடல்வழி வர்த்தக வழிகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான கடல்களை நோக்கிச் செயல்படவும் கடற்படைகள் ஒன்றொக்கொன்று ஒத்துழைப்பது முக்கியம்," என்றார் 'ஆர்எஸ்எஸ் விகர்' போர்க் கப்பலின் தலைவர் கெவின் சியோங் கூறினார்.

