கொவிட்-19 வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய வீடற்ற சிங்கப்பூரருக்கு நேற்று ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாத்தாமிலிருந்து சிங்கப்பூர் திரும்பியதும் ரோஸ்மான் அப்துல் ரஹ்மானுக்கு, 41, வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அதை மீறியதும் இல்லாமல் 13 நாட்கள் பாதுகாவல் அதிகாரியாக அவர் பணியாற்றினார்.
நேற்று நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது வழக்கறிஞர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். குற்றச்செயல் புரிந்தபோது அவருக்கு கிருமித் தொற்று இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தோனீசிய மனைவியை பாத்தாமில் இறக்கிவிட்ட பிறகு ரோஸ்மான் சிங்கப்பூர் திரும்பினார்.
அப்போது இருந்த விதிமுறையின்படி 14 நாட்கள் வீட்டில் தங்கும் ஒப்புதல் கடிதத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அதில் பொங்கோலில் உள்ள உறவினரின் முகவரியை அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரோஸ்மான் தனக்குச் சொந்தமாக வீடு இல்லை என்பதை குடிநுழைவுத் துறையிடமும் தெரிவிக்கவில்லை.
ஏப்ரலில் வீடற்றவர்களுக்கான தங்குமிடத்துக்கு மாறுவதற்கு முன்பு சைனாடவுன் பாயிண்ட் பின் பக்கத்தில் உள்ள கார்ப்பேட்டை, விவோசிட்டிக்கு அருகில் உள்ள நடைபாதை போன்ற இடங்களில் அவர் படுத்து உறங்கினார்.
மார்ச் 20 முதல் ஏப்ரல் 3 வரை ஏறக்குறைய ஒவ்வோர் இரவும் ஜூ கூனில் அவர் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அவர் குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. உடனே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது பேசிய ரோஸ்மானின் வழக்கறிஞர்கள் அஸ்ரி இம்ரான் டானும் ஜோஷுவா சோவும் இதனை ஒரு தனிப்பட்ட வழக்காகக் கருதி ரோஸ்மானுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
"அவருக்கு அடிப்படை வசதிகள் இல்லை. வீட்டில் தங்கும் உத்தரவை மீறுபவர்களுக்கும் இவருக்கும் வேறுபாடு உள்ளது. ரோஸ்மான் வேறு வழி இல்லாத நிலையில் உத்தரவை மீறியிருந்தார்," என்று அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து ரோஸ்மானின் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதி இங் அவகாசம் அளித்தார்.
டிசம்பர் 16ஆம் தேதி வரை ரோஸ்மானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒத்திவைக்கவும் நீதிபதி சம்மதித்தார்.

