வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய வீடற்றவருக்கு சிறை

வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய வீடற்றவருக்கு சிறை

2 mins read
6c347d25-4373-4475-b354-c676cccea7f4
அரசு நீதி மன்றத்துக்கு வந்த ரோஸ் மான் அப்துல் ரஹ்மான்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை மீறிய வீடற்ற சிங்­கப்­பூ­ர­ருக்கு நேற்று ஏழு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பாத்­தா­மி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தும் ரோஸ்­மான் அப்­துல் ரஹ்­மா­னுக்கு, 41, வீட்­டில் தங்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் அதை மீறி­ய­தும் இல்­லா­மல் 13 நாட்­கள் பாது­கா­வல் அதி­கா­ரி­யாக அவர் பணி­யாற்­றி­னார்.

நேற்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் குற்­றத்தை ஒப்­புக்கொண்ட அவ­ருக்கு ஏழு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆனால் அவ­ரது வழக்­க­றி­ஞர் தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய முடிவு செய்துள்ளனர். குற்­றச்­செயல் புரிந்­த­போது அவ­ருக்கு கிரு­மித் தொற்று இல்லை என்று நீதி­மன்றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்­தோ­னீ­சிய மனை­வியை பாத்­தா­மில் இறக்­கி­விட்ட பிறகு ரோஸ்­மான் சிங்­கப்­பூர் திரும்­பி­னார்.

அப்­போது இருந்த விதி­மு­றை­யின்­படி 14 நாட்­கள் வீட்­டில் தங்­கும் ஒப்­பு­தல் கடி­தத்­தில் அவர் கையெ­ழுத்­திட்­டார்.

அதில் பொங்­கோ­லில் உள்ள உற­வி­ன­ரின் முக­வ­ரியை அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ரோஸ்­மான் தனக்குச் சொந்­த­மாக வீடு இல்லை என்­பதை குடி­நு­ழை­வுத் துறை­யி­ட­மும் தெரி­விக்­க­வில்லை.

ஏப்ரலில் வீடற்றவர்களுக்கான தங்குமிடத்துக்கு மாறுவதற்கு முன்பு சைனாடவுன் பாயிண்ட் பின் பக்கத்தில் உள்ள கார்ப்பேட்டை, விவோசிட்டிக்கு அருகில் உள்ள நடைபாதை போன்ற இடங்களில் அவர் படுத்து உறங்கினார்.

மார்ச் 20 முதல் ஏப்­ரல் 3 வரை ஏறக்­கு­றைய ஒவ்­வோர் இர­வும் ஜூ கூனில் அவர் பாது­கா­வல் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்றி வந்­தார்.

குடி­நு­ழை­வுத் துறை அதி­கா­ரி­கள் அவர் குறிப்­பிட்ட வீட்­டுக்­குச் சென்­ற­போது அங்கு அவர் இல்லை. உடனே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது பேசிய ரோஸ்­மா­னின் வழக்­க­றி­ஞர்­கள் அஸ்ரி இம்­ரான் டானும் ஜோஷுவா சோவும் இதனை ஒரு தனிப்­பட்ட வழக்­கா­கக் கருதி ரோஸ்­மா­னுக்கு கடு­மை­யான தண்­டனை விதிக்க வேண்­டாம் என்று கேட்­டுக்கொண்­ட­னர்.

"அவ­ருக்கு அடிப்­படை வச­தி­கள் இல்லை. வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை மீறு­ப­வர்­க­ளுக்­கும் இவ­ருக்­கும் வேறு­பாடு உள்­ளது. ரோஸ்­மான் வேறு வழி இல்­லாத நிலையில் உத்­த­ரவை மீறி­யி­ருந்­தார்," என்று அவர்­கள் வாதிட்­ட­னர்.

இதை­ய­டுத்து ரோஸ்­மா­னின் வழக்­க­றி­ஞர்­கள் மேல்­மு­றை­யீட்டு மனு­வைத் தாக்­கல் செய்ய நீதி­பதி இங் அவ­கா­சம் அளித்­தார்.

டிசம்­பர் 16ஆம் தேதி வரை ரோஸ்­மா­னுக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னையை ஒத்­தி­வைக்­க­வும் நீதி­பதி சம்­ம­தித்­தார்.