சிங்கப்பூரில் 17 மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் மரண தண்டனை குற்ற வழக்கில் தங்களுக்கு எதிராக தலைமை சட்ட அதிகாரி பாரபட்சத்துடன் நடந்து கொண்டார் என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று அந்த மனுவை நீதிபதி வேலரி தியன் தள்ளுபடி செய்தார்.
நீதிமன்ற நடைமுறைகளை அவர்களுடைய விண்ணப்பம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எழுத்துபூர்வமாக அளித்த தீர்ப்பில் அவர் கூறினார்.
கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தவர்களில் ஒருவர் மட்டும் மலேசியர். மற்ற அனைவரும் சிங்கப்பூரர்கள்.
மலாய் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி அவர்கள் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
"இந்த வழக்கின் அடிப்படை வாதமே தவறு என்று கூறிய நீதிபதி, அவர்களுடைய காரணம் தெளிவற்றது. முழுத்தகவலும் இல்லாமல் அதற்கு ஏற்ப நீதிமன்றத்தை செயல்படக் கோருவது தவறு," என்றார்.
"குறிப்பாக வாழ்க்கை ஆபத்தில் உள்ள சமயத்தில் இனம் மற்றும் சமத்துவம் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கவனமின்றி கொண்டு வரக் கூடாது. ஊகங்கள் மீதான, பொருத்தமற்ற வழக்குகளைக் கொண்டு வருவது நீதிமன்ற செயல்முறைகளை அவமதிக்கும் செயல் என்று நீதிபதி குறிப் பிட்டார். மரண தண்டனை சிறை கைதிகளில் ஒருவரோ அல்லது பலரோ தண்டனைக்கு எதிராக பலவகையில் பல மேல் முறையீடுகளைச் செய்து தோல்வி அடைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

