சிங்கப்பூர் அதன் மூன்றாவது தேசிய அதிவேக கணினியை உருவாக்கி வருகிறது. கொவிட்-19 மற்றும் இதர சுகாதாரப் பராமரிப்புப் பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் இப்புதிய கட்டமைப்பு கைகொடுக்கும்.
நோயாளி ஒருவரின் எதிர்கால நோய் பாதிப்பு நிலையை முன்னுரைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் திறனை உருவாக்க, இப்புதிய அதிவேக கணினிக் கட்டமைப்பு பயிற்சியளிக்கும் என்றும் அது சில மணி நேரத்திலேயே முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற பயிற்சி அளிப்பதற்கு அதிவேக கணினிக்குள் குறிப்பிட்ட நோய் பாதிப்புகளையுடைய நோயாளிகளின் கடந்தகால தரவுகள் செலுத்தப்படலாம்.
ஒரு விநாடிக்குள் 1,000 டிரில்லியனுக்கு மேற்பட்ட கணக்குகளைப் போடக்கூடிய கட்டமைப்பை இந்த அதிவேக கணினி கொண்டுள்ளது. அதனால், செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சி அளிப்பதும் மிக விரைவில் நடந்துவிடும்.
கொவிட்-19 தொற்றுக்கான சிகிச்சை, புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல் போன்ற அம்சங்கள் தொடர்பில் வெவ்வேறு சிகிச்சை முறைகளை இந்த அதிவேக கணினி மூலம் மதிப்பிட முடியும். இதனால் இதர கொரோனா கிருமி ஆராய்ச்சிக்கு இவ்வகை கணினி பெரிதும் துணைபுரிய வல்லது.
அடுத்த ஆண்டு தேசிய அளவிலான இந்த மூன்றாவது பிரம்மாண்ட அதிவேக கணினி தயாராகிவிடும்.
இது தொடர்பான ஒப்பந்தத்தை சிங்கப்பூர் தேசிய அதிவேக கணினிப் பயன்பாட்டு நிலையமும் தேசிய பல்கலைக்கழக சுகாதார செயல்முறையும் (என்யுஎச்எஸ்) நேற்று முடிவுசெய்தன.
முதல் இரண்டு தேசிய அதிவேக கணினிகள் போல் அல்லாமல், பெயரிடப்படாத இம்மூன்றாவது கணினி சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
முதல் அதிவேக கணினி 2016ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. இரண்டாவது அதிவேக கணினி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம், வானிலைக் கண்காணிப்பு, நகரத் திட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மூலப்பொருள்கள் ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இவ்விரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
மூன்றாவது அதிவேக கணினி, என்யுஎச்எஸ் வளாகத்தில் அமைந்திருந்தாலும் தேசிய அளவிலான அதிவேக கணினி என்பதால் அது சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்காக பயன்படுத்தப்படும்.
மூன்றாவது அதிவேக கணினியை உருவாக்குவதன் மொத்த செலவு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இரண்டாவது அதிவேக கணினிக்கு ஆன செலவு $40 மில்லியன் என்று கூறப்படுகிறது.
ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2020 திட்டத்தின்கீழ் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கிய $19 பில்லியனிலிருந்து புதிய அதிவேக கணினிக்கான நிதி பெறப்படும்.

