குழந்தை ஆபாசப் படங்கள், பாலியல் செயல்களுக்காக அதன் நம்பிக்கையைப் பெறுதல்
சிங்கப்பூரின் வலைப்பதிவாளர் ஏமஸ் யீ, சிறுவர் ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் செயல்களுக்காக அவர்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்று முன்தினம் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
23 வயதான யீ, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 14 வயதாக இருந்த அந்த பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளக்கூடாது என்று சிகாகோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் 16 சிறுவர் ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை யீ எதிர்கொண்டார். அதை அவர் ஒப்புக்கொள்ள சம்மதித்த குற்றச்சாட்டுகளின் பேரில் தள்ளு படி செய்யப்பட்டன.
குழந்தை ஆபாசப் படங்கள் பற்றிய முதல் குற்றச்சாட்டின்படி, பிப்ரவரி மற்றும் ஜூலை 2019க்கு இடையில், வீடியோ மற்றும் பிற ஊடகங்களில் தோன்றி, ஆபாசமான முறையில் காட்சி கொடுக்குமாறு, பாதிக்கப்பட்டவரை யீ கோரினார், வற்புறுத்தினார், தூண்டினார் என்றும் அவரது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இல்லினாய் குற்றவியல் சட்டத்தின் கீழ் இக்குற்றங்களுக்கு குறைந்தபட்சம் நான்கு ஆண்டு முதல் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான யீயிடம், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அவர் நாடுகடத்தப்படலாம், அமெரிக்காவில் தங்கி யிருக்க அனுமதி மறுக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தில் அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்படலாம் என்று நீதிபதி கேரல் ஹாவர்ட் அறிவுறுத்தினார்.
இந்த தண்டனைகள் குடியிருப்பு, வேலைவாய்ப்பு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற உரிமங்களைப் பெறுவதற்கான அவரது வாய்ப்பையும் பாதிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
நீதிபதி சொன்னதை தாம் புரிந்துகொண்டதாக யீ பதிலளித்தார். விசாரணையின் பெரும்பகுதியை ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்த யீ, தண்டனையை விதிக்கும் முன் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நீதிபதி கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.
யீ அவரது 20 வயதுகளின்போது குற்றங்களைப் புரிந்தார். அப்போது அவர் சிகாகோவின் குக் கவுண்டியில் வசித்து வந்தார்.
பிப்ரவரி 2019ல் இணைய உரையாடல் தளம் வழி யீ பாதிக்கப்பட்டவரின் நட்பைப் பெற்றார் என்று உதவி அரசு வழக்கறிஞர் மார்செல் டெய்லர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை தனது உடற்பகுதிகளை நிர்வாண மாகக் காட்டுமாறு யீ பலமுறை கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். குற்றம் நடந்தபோது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனக்கு 14 வயது என்று யீயிடம் கூறியதாக ஆதாரங்கள் காட்டுவதாக திரு டெய்லர் கூறினார்.
யீ தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம், ஆனால் 30 நாட்களுக்குள் அவர் தனது குற்றத்தை திரும்பப் பெறுவதற்கு முன் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அவர் இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் ஒரு சமயக் குழுவை துன்புறுத்துதல் மற்றும் அவமதித்த தற்காக சிங்கப்பூரில் இரண்டு முறை ஏமஸ் யீ சிறையில் அடைக்கப் பட்டார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த அவருக்கு 2017ஆம் ஆண்டு புகலிடம் கிடைத்தது.

