புதிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைப்பதன் வழி தென்கொரிய, வடகொரிய நாடுகளைப் பற்றிய அதன் நிபுணத்துவ அறிவை சிங்கப்பூர் பெருக்கிக்கொள்ள உள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) கிழக்காசிய கல்விக் கழகம் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று கொரிய நிலையத்தை நிறுவியது. கொரிய தீபகற்பத்தின் ஆளுமை, அரசதந்திரம், மேம்பாடு தொடர்பில் இந்நிலையம் ஆராயவுள்ளதாகக் கூறப்பட்டது.
புக்கிட் தீமாவின் என்யுஎஸ் வளாகத்தில் அமைந்துள்ள கிழக்காசிய கல்விக் கழகத்தில் புதிய நிலையம் அமைந்துள்ளது. நிலையத்தை நேற்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
பல்வேறு அம்சங்கள் பொருந்தி, கவர்ச்சிகரமாக கொரிய தீபகற்பம் விளங்குவதாகக் குறிப்பிட்ட டாக்டர் விவியன், பகுப்பாய்வுக்கும் கல்விசார் பணிகளுக்கும் அப்பகுதியை ஆராய்வது மிகவும் ஏற்றது என்றார்.
"தீபகற்பத்தில் ஏற்பட்டுவரும் மேம்பாடுகள் நமக்கு என்ன தெரிவிக்க வருகின்றன என்பதையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் நாம் மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் நம் மீதும் உலகநாடுகள் மீதும் ஏற்படக்கூடிய பரந்த அளவிலான தாக்கத்தையும் நாம் அறிந்திடவேண்டும்," என்றார் அவர்.
கொரிய நிலையத்தின் தலைவரும் கிழக்காசிய கல்விக் கழகத்தின் முதன்மை ஆராய்ச்சி உறுப்பினருமான டாக்டர் லாம் பெங் எர், நிலையத்தின் பொறுப்பை ஏற்பார்.
கிழக்காசிய வட்டாரத்தைப் பற்றிய கல்விக் கழகத்தின் புரிதலை, கொரிய நிலையம் மேலும் ஆழமானதாக்கும் என்று டாக்டர் லாம் பேட்டியின்போது குறிப்பிட்டார்.
"கொரியாவைப் பற்றி புரிந்துகொள்ளாமல் கிழக்காசியா, சீனா, ஜப்பான் பற்றி உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அவை அனைத்துக்கும் இடையே நீண்டகால வரலாற்று உறவுகள் உண்டு. அந்த உறவுகள் நவீன யுக உறவுகளையும் பாதிக்கின்றன," என்று விளக்கினார் அவர்.
சிங்கப்பூரில் அமெரிக்க, வடகொரியத் தலைவர்கள் டிரம்ப், கிம் இருவரும் 2018ல் சந்தித்துக்கொண்டதும் இந்நிலையம் அமைவற்கு ஒரு காரணம் என்றார் டாக்டர் லாம்.
கொரிய தீபகற்பம் குறித்து தனித்துவமான தென்கிழக்காசிய கண்ணோட்டம் ஒன்றை ஏற்படுத்த, நிலையம் திறனாளர்களைக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் சிங்கப்பூர், ஆசியான் இரண்டுக்கும் நம்பகமான, ஆழமான அறிவை ஏற்படுத்தவும் முடியும் என்றார்.
"தென்கொரியா, வடகொரியா இரண்டையும் பற்றி சிங்கப்பூர் அதன் சொந்த புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
"இரு நாடுகளுடனும் கொண்டுள்ள நல்லுறவை சிங்கப்பூர் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இவ்வாறு செயல்படலாம். இதனால் கொரியாவுடன் நல்லுறவு வளர்த்துக்கொள்ளாத நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்குக் கிடைக்காத தகவல்கள் நமக்குக் கிட்டலாம்," என்றார் டாக்டர் லாம்.
தென்கிழக்காசியாவிலேயே இதுபோன்ற நிலையம் அமைக்கப்பட்டுள்ள இதுவே முதல் முறை. இத்திட்டத்தை தென்கொரியா, வடகொரியா இரண்டுமே வரவேற்றுள்ளதாக என்யுஎஸ் தெரிவித்தது.

