செய்திக்கொத்து

2 mins read
16a89a18-26f8-47a5-9de9-4ebf3afb56c2
-

வேலை-கல்வித் திட்டத்தில்

தலைசிறந்த 13 பேருக்கு அங்கீகாரம்

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வேலை-கல்விப் பட்டயத் திட்டத்தில் இணைந்து இவ்வாண்டு தலைசிறந்து விளங்கிய 13 பேருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. செப்டம்பர் இறுதியில் பட்டயக் கல்வியை முடித்த 242 பயிற்சி மாணவர்களில் பதக்கம் வென்ற 13 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த வேலை-கல்வித் திட்டத்திற்கு வலுவான தொழில்துறை ஆதரவு தேவைப்படுவதாக பதக்கங்களை வழங்கிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். வாழ்நாள் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் ஆதரவு அளிக்கும் முக்கிய அம்சம் இத்திட்டம் என்றார் அவர். 2018ஆம் ஆண்டில் 41 நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்ந்தன. இன்று அந்த எண்ணிக்கை பத்து மடங்காகி 410ஆக உள்ளது. அடுத்த ஆண்டு இத்திட்டத்தில் மொத்தம் 36 பாடங்கள் இடம்பெறும். 2022ஆம் ஆண்டுக்கான இணைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் அடுத்த மாதம் 15ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.

புக்கிட் பாஞ்சாங்கில் 'பசுமை' நூலகம்

பொறியியல், கட்டடக்கலை மாணவர்கள் அடங்கிய குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நூலகத்தை புக்கிட் பாஞ்சாங் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின்கீழ் வடிவமைத்துக் கட்டவுள்ளது. வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த முன்னோட்டத் திட்டம் தொடங்கவுள்ளது. பயன்படுத்தப்பட்ட புத்தகங்களைக் குடியிருப்பாளர்கள் மறுபயனீடு செய்ய வேண்டும். அத்துடன் குறைந்த வசதியுடைய குடும்பங்களுக்கு நூல் வாசிக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் உருவாகி உள்ளது. இந்தப் பசுமை நூலகம் அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டிற்குள் தயாராகிவிடும் என்று நேற்று நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் நீடித்த நிலைத்தன்மை திட்டத்தின் (எஸ்எஸ்பி) தொடக்க நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம்