படுத்த படுக்கையாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத 76 வயது மூதாட்டியின் தலை முடியை இழுத்ததோடு அவரது முகத்திலும் வாயிலிலும் இடித்துக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்கு நேற்று 30 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த 40 வயது அயே அயே நயிங், எளிதில் பாதிப்படையக்கூடிய நபரைத் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூதாட்டியை பராமரிப்பதற்காக அவரது மகள் ஈசூனில் உள்ள தனது வீட்டில் அயே அயேயை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
தன்னை அயே அயே அடிப்பதாக மூதாட்டி கூறியதைத் தொடர்ந்து அவரது மகள் வீட்டில் கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தியிருந்தார்.
அதில் பதிவான சில காட்சிகள் மூதாட்டியின் மகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பதிவான ஒரு காட்சியில் படுத்துக்கிடக்கும் மூதாட்டியின் மூக்கை விரலால் அழுத்திப் பிடித்து அவரது முகத்தில் மாறி மாறி அவர் குத்துகிறார்.
மற்றொரு சம்பவத்தில் மூதாட்டியின் தலைமுடியை இழுத்து அவர் உட்கார வைக்கிறார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு படுத்துக் கிடக்கும் மூதாட்டியின் வாயை தண்ணீர் போத்தலால் அவர் அழுத்துகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவத்தில் மூதாட்டியின் முகத்துக்கு அருகே மணியடிக்கும் கடிகாரத்தை ஆட்டி, அதனாலேயே அவரது வாயை அயே அயே இடிக்கிறார்.
மூதாட்டிக்கு நடந்த மருத்துவ சோதனையில் அவரது நெற்றி, வலது கன்னம், இடது தோள்பட்டை, இடது தொடை ஆகிய இடங்களில் சிராய்ப்புக் காயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அேய அயேவுக்கு தன்னை சரிசெய்துகொள்வதில் பிரச்சினை இருப்பதாக மனநலக் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் செலன் யாப், முதலாளியிடம் அயேவுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும் முதலாளி அவரை நல்லவிதமாக நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இருந்தாலும் வேலையை ஓழுங்காக செய்யாதபோது முதலாளி திட்டியதால் மனஉளைச்சலுக்கு ஆளாகிய அயேவுக்கு முதலாளி மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும் அவர் தனது கோபத்தை மூதாட்டியிடம் காட்டியதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அயே அயேயை பிரதிநிதித்த வழக்கறிஞர் லும் குவோ ரோங், தனது கட்சிக்காரருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.
"அயே அயே திட்டமிட்டு மூதாட்டியைத் தாக்கவில்லை. ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு மூதாட்டியையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் கோபத்தில் மூதாட்டியைத் தாக்கியிருக்கிறார். மற்றபடி மூதாட்டிக்கு அவரது கவனிப்பு பிடித்திருந்தது. மூதாட்டியை அயே அயே தனது பாட்டியாகவும் கருதினார்," என்று அயே அயேயின் வழக்கறிஞர் கூறினார்.
வேண்டுமென்றே காயப்படுத்திய ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். எளிதில் பாதிக்கப்படக்கூடியவருக்கு எதிரான குற்றச்செயலாக இருந்தால் அதிகபட்ச தண்டனை இரண்டு மடங்குக்கு அதிகரிப்படலாம். ஆனால் அயே அயேவுக்கு 30 வாரச் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது.

