'புகார் பற்றி மௌனம் காக்குமாறு சொல்லவில்லை'
முன்னாள் நாடாளுமன்ற உறுப்
பினர் யாவ் ஷின் லியோங் பற்றி 2012ஆம் ஆண்டு எழுந்த புகார்கள் தொடர்பாக மௌனமாக இருந்துவிடுமாறு அவரிடம் பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் சொல்லவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் லியோன் பெரேரா நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக பாட்டாளிக் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு தொடர்பில் தம் மீது புகார்கள் கூறப்படுவது பற்றி கட்சித் தலைவர்களான லோ தியா கியாங், சில்வியா லிம் ஆகியோரிடம் உடனே தெரிவித்ததாகவும் அதற்கு அவர்கள் மௌனமாக இருந்துவிடுமாறு யோசனை கூறியதாகவும் 'ஏமஸ் ராவ்' என்ற பெயரில் திரு யாவ் நேற்று முன்தினம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு தெரிவித்திருந்தது.
2012ஆம் ஆண்டு தாம் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது தொடர்பாக திரு பிரித்தம் சிங் கூறிய கருத்தின் தொடர்பில் அவரது பதிவு அமைந்திருந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாட்டாளிக் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
"மௌனம் காக்குமாறு திரு லோவும் திருவாட்டி லிம்மும் கூறவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மாறாக, பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னர் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு திரு யாவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை," என்று திரு பெரேரா பெயரில் வெளியிடப்பட்டு உள்ள பாட்டாளிக் கட்சியின் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்து உள்ளது.
திரு யாவ், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹவ்காங் தனித்தொகுதியில் பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் தகாத உறவு வைத்திருப்பதாக 2012ஆம் ஆண்டு ஜனவரியில் வதந்திகள் பரவின. மறு மாதமே (2012 பிப்ரவரி) கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது.
திருவாட்டி ரயீசா கான், செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது தொடர்பாகக் கடந்த வாரம் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தின்போது திரு யாவ் தொடர்பான விவகாரம் எழுப்பப்பட்டது.

