சட்டவிரோத சூதாட்ட இணையத்தளம் மூலம் $97 மி. வசூல்; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

சட்டவிரோத சூதாட்ட இணையத்தளம் மூலம் $97 மி. வசூல்; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

2 mins read
ba54bdab-7a61-4be4-84f3-ed63985c0c43
2017ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சீட் சியோ பூன். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு, சட்டவிரோதமாக இரண்டு சூதாட்ட இணையத்தளங்களை நடத்தியது. இரண்டே ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் அந்தக் குழு, ஒரு தளத்தின் மூலம் $97.68 மில்லியனை வருவாயாக ஈட்டியது.

அந்த மூவரில் ஒருவரான சீட் சியோ பூன் என்பவர் இரண்டு இணையத்தளங்களின் வழியாக கட்டப்பட்ட பந்தயத் தொகையில் இருந்து மாதம் குறைந்தது $19,000 லாபம் அடைந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த 57 வயது சிங்கப்பூரர், ஏழு குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (டிசம்பர் 8) குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர 54 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இதர இரண்டு பேருக்கு எதிரான வழக்கு இன்னமும் நடந்து வருகிறது.

சீட் சியாவ் ஹுவாட், 66, சீட் சியான் தியான், 73, என்ற அந்த இரண்டு பேரும் சீட் சியோ பூனின் சகோதரர்கள்.

குற்றச்செயல் குண்டர் கும்பல்களை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றச்செயல் தடுப்புச் சட்டம் 2015ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது 2016 ஜூன் மாதம் நடப்புக்கு வந்தது.

குற்றச்செயல் கும்பல்களை நசுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2016ல் சீட் சியோ பூன் கைதானார். இவர் 2017ல் நீதிமன்றத்தில் முன்னதாக முன்னிலையானவர்.

திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

முகவர்களிடம் இருந்தும் பந்தயத் தொகை கட்டுவோரிடம் இருந்தும் சட்டவிரோதமாக 4டி பந்தயத் தொகையை வசூலிக்க ஏதுவாக சகோதரர்கள் மூவரும் சொந்தமாக சூதாட்ட இணையத்தளம் ஒன்றை 2011ல் ஏற்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்