மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 33 தொண்டூழியர்கள் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் (எஸ்ஐஎஃப்) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டு உள்ளனர்.
வழக்கமாக ஈராண்டுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டியும் இந்த கௌரவ விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரடியாக நிகழ்வில் பங்கேற்றோர் தவிர 18 நாடு
களிலிருந்து மெய்நிகர் வாயிலாகவும் பலர் கலந்துகொண்டனர்.
அறநிறுவனத்தின் பிரதிநிதிகளும் சிங்கப்பூர் தூதரக அலுவலர்களும் பங்கேற்பாளர்களில் அடங்குவர். விருது பெற்றவர்களில் நோய் தணிப்புப் பரா
மரிப்பு நிபுணர் ராமசுவாமி அகிலேஸ்வரனும், 62, ஒருவர். சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் தொண்டூழியராக 12 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த மருத்துவர், இந்தோனீசியாவில் படுத்த படுக்கையாக இருந்த பதின்மவயது இளையர் ஒருவருக்கு அவரது இறுதிக் காலத்தில் கனிவன்பு செயல் மூலம் மனமகிழ்வை ஏற்படுத்தினார்.
எலும்புப் பகுதியில் கட்டி ஏற்பட்டதால் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தமது நண்பர்களில் ஒருவர்கூட தம்மை வந்து பார்க்கவில்லை என்றும் தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்வதாகவும் திரு அகிலேஸ்வரனிடம் அந்த இளையர் பகிர்ந்துகொண்டார். உடனடியாக, தாதியர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து இளையரைச் சந்திக்கச் செய்தார். அதில் அந்த இளையர் பூரித்துப்போனார். திரு அகிலேஸ்வரனின் நற்செயலுக்காக உலகக் குடிமகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய, அறநிறுவனத்தின் புரவலருமான அதிபர் ஹலிமா, கொள்ளைநோய் காலத்திலும் மனிதர்களுக்கிடையிலான உறவை வளர்ப்பதிலும் அனைத்துலக ஒத்துழைப்பைப் பேணுவதிலும் அறநிறுவனம் சிறப்புறப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார்.
"உலக நிலவர சவால்கள் ஒருபுறம் இருந்த
போதிலும் சிறந்த செயல்களுக்காக உலக சமூகங்களுடன் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் தமது நோக்கத்தில் அறநிறுவனம் உறுதியாக இருந்து பணியாற்றி உள்ளது," என்றார் அதிபர்.
நிகழ்ச்சியில் திருவாட்டி கண்ணகிதேவி நாராயணசாமி, 59, திரு டேவிட் போங், 31, போன்ற அறநிறுவனத் தொண்டூழியர்களுக்கு குடிமகன் தூதர் விருது வழங்கப்பட்டது. உலகச் சமூகங்களுடன் தங்களது நிபுணத்துவத்தையும் வளங்களையும் பகிர்ந்துகொள்ளும் சிங்கப்பூரர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

