தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், 'புரோஜெக்ட் வெல்னஸ்' திட்டம், நன்யாங் தொழில்நுட்பப் பல்
கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை, செயிண்ட் லியூக்ஸ் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த 5,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பரிவுப் பொட்டலங்களை வழங்கின.
புரோஜெக்ட் அப்ரிசியேஷன் @ சவுத் வெஸ்ட் எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பரிவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்துக்கு கார்டியன் சிங்கப்பூர், ஜூரோங் உயர்நிலைப்பள்ளி, யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஆதரவு வழங்கின.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பரிவுப் பொட்டலங்கள் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்டன.
பரிவுப் பொட்டலங்களில் முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான் திரவம், வைட்டமின்கள், புரோஜெக்ட் வெல்னஸ் தொண்டூழியர்கள் செய்த டிரேஸ்டுகெதர் பைகள், மெல்லிழைத் தாள் பைகள், ஜூரோங் உயர்நிலைப்பள்ளி மாணவர்களாலும் யுவான் சிங் உயர்
நிலைப்பள்ளி மாணவர்களாலும் வடிவமைக்கப்பட்ட வாழ்த்து அட்டைகள் ஆகியவை இடம்பெற்றன.
நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும்போது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பாதுகாப்புடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்ய பரிவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
"கொவிட்-19 நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு அதிக அளவில் மனவுளைச்சலை
ஏற்படுத்தியுள்ளது.
"தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கிருமி பரவிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
"பரிவுடன் செயல்பட்டு கிருமித்தொற்றிலிருந்து நம்மை அவர்கள் பாதுகாத்தனர்.
"அவர்களது அயராத உழைப்புக்கும் தியாகத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தப் பரிவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன," என்று தென்மேற்கு வட்டார மேயர் திருவாட்டி லோ யென் லிங் தெரிவித்தார்.

