பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயது ஆடவர் அக்குற்றச்சாட்டி லிருந்து விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் மதுபோதையில் இருந்த பெண்ணை மானபங்கப்படுத்தியதாக அவர் மீதான குற்றச்சாட்டு திருத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை 27 வயது வோங் ஷின் சியோங் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஊனமுற்றோர்களுக்கான கழிவறையில் பெண்ணின் உள்ளாடைகளை அவர் அகற்றியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட 27 வயது ெபண் மதுபோதையில் இருந்ததால் அவரது உள்ளாடைகள் அகற்றப்பட்டதுகூட அவருக்குத் தெரியவில்லை.
வேறு ஒரு பெண், மானபங்கப்படுத்தப்பட்டதை போலிசார் விசாரித்தபோது இவரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வோங் ஷின் சியோங்கால் மானப்பங்கப் படுத்தப்பட்ட இரு பெண்களும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
2018 ஏப்ரல் ரிவேர் வேலி, கிளார்க் கீயில் உள்ள கழிவறையில் 27 வயது பெண்ணை பலவந்தமாக வோங், 27, மானப்பங்கப்படுத்தினார். ஸூக் இரவு கேளிக்கை விடுதியில் அந்தப் பெண்ணை வோங் சந்தித்தார். அவரைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு உள்ளாடைகளை பாதியளவுக்கு இறக்கி அவரது பின்புறத்தை வோங் படம் பிடித்துள்ளார்.
டாக்சியில் வீட்டுக்குச் சென்றபோது கைபேசியை தவறவிட்டதால் அந்தப் பெண் கிளார்க் கீக்கு மீண்டும் திரும்பினார். பின்னர் பெண்ணும் வோங்கும் தனித்தனியாக பிரிந்துசென்றுவிட்டனர்.
என்ன நடந்தது என்பது அந்தப் பெண்ணுக்கு சிறிதளவுகூட நினைவில் இல்லை. பதின்ம வயது பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டதை வோங்கிடம் விசாரித்தபோது 27 வயது பெண்ணும் பாதிக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். பின்னர் அந்தப் பெண்ணிடம் போலிசார் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
2019 மார்ச் மாதம் விடியற்காலை நடந்த சம்பவத்தில் பதின்ம வயது பெண்ணை வோங் மானப்பங்கப்படுத்தினார்.
கேளிக்கை விடுதியில் நண்பர்களுடன் குடித்து நேரத்தைக் கழித்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிந்த பதின்ம வயது பெண் தனியாக இருப்பதைக் கண்டு அவரிடம் பேசி வோங் டாக்சியில் அழைத்துச் சென்றுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில் பதின்ம வயது பெண்ணிடம் வோங் உடலுறவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டேன் என்ற வோங்கின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அதைத் தீர்மானிக்கும் வயதில் பதின்ம வயது பெண் இல்லை என்று நீதிபதி மேவிஸ் சியோன் குறிப்பிட்டார். இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட வோங்குக்கு பிப்ரவரி 3ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று தண்டனைகள் விதிக்கப்படலாம். பாலியல் பலாத்காரத்துக்கு இருபது ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

