ஆசியான் வட்டாரத்தின் பெரும்பகுதியில் சராசரியை ஒட்டி அல்லது அதற்கும் மேலாக மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், அடுத்த சில மாதங்களில் வறண்ட, வெப்பமான காலநிலை காரணமாக தீப்பரப்புகள் உருவாகலாம் என்றும் அதனால் புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆசியானின் வடபகுதியில் வழக்கமான வறண்ட பருவம் தொடங்கிவிட்டது. அது அடுத்த ஆண்டு மே மாதம்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, வடகிழக்குப் பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து இந்த வறண்ட பருவம் தொடங்கும் என்று ஆசியான் நிபுணத்துவ வானிலை மையம் ஓர் அறிக்கை மூலமாக நேற்று தெரிவித்தது.
நிலநடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் இப்போதைக்கு ஏற்பட்டுள்ள 'லா நினா' நிகழ்வு காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் ஈரமான வானிலை நிலவுகிறது.
கடந்த ஈராண்டுகளில் வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலில் 'லா நினா' நிகழ்வு ஏற்பட்டிருப்பது இது இரண்டம் முறை.
இதன் விளைவாக, இம்மாதத்தில் இருந்து 2022 மார்ச் மாதம்வரை ஆசியானின் வடபகுதியில் சராசரியை ஒட்டியும் அல்லது அதற்கும் மேலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், வறண்ட, வெப்ப வானிலையின்போது, தீப்பற்றி வெப்பமிகு பகுதிகள் உருவாகலாம் அதனால் புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் மையம் முன்னுரைத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தின்போது, ஆசியானில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து குறைந்த அளவில் காற்று வீசும்.
அப்படி வீசும் காற்று, புகைமூட்டத்தை அண்டை நாடுகளுக்கும் கொண்டு செல்லலாம் என்பதால் எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசியான் வட்டாரத்தில் எல்லை தாண்டிய புகைமூட்டத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மையம் அறிவுறுத்தி இருக்கிறது.