இரண்டு மில்லியன் வெள்ளிக்கும் மேல் திரட்டிய 'சைல்ட்எயிட்'
சிறுவர் நன்கொடை இசை நிகழ்ச்சியான சைல்ட்எயிட், மொத்தம் $2,008,711ஐ திரட்டியுள்ளது. 17வது முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் 'வர்ச்சுவோசோ'. ரிசொர்ட்ஸ் வர்ல்ட் செந்தோசாவில் சைல்ட்எயிட் அரங்கேறியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகிய இரண்டு ஊடகங்களும் இதற்கு ஏற்பாடு செய்தன.
'எஸ்டி ஸ்கூல் பாக்கெட் மனி ஃண்ட்' எனும் நிதியுதிவித் திட்டத்தின்கீழ் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சி இது. வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் கலைகளில் திறமை உள்ள இளையர்களுக்கு உதவும் 'பிடி படிங் ஆர்ட்டிஸ்ட்ஸ்' திட்டத்துக்கு நிதி திரட்டுவதும் சைல்ட்எயிட்டின் இலக்கு.
நிகழ்ச்சியை நேரில் காண வந்த சுமார் 500 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். சிறப்பு விருந்தினர்களாக அதிபர் ஹலிமா யாக்கோப், அவரது கணவர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூட்டியூப் தளங்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ் இணையத்தளங்கள் ஆகியவற்றில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. எட்டிலிருந்து 19 வயதுக்கு உட்பட்ட 31 படைப்பாளர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உயரிய அறிவியல் விருதை வென்ற சிங்கப்பூரின் 'பேட்மேன்'
'பேட்மேன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் பேராசிரியர் வாங் லின்ஃபா, 'சார்ஸ்' கிருமி வௌவால்களிடமிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தவர். இவருக்கு அதிபர் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் வாங், மிருகங்களிலிருந்து மனிதர்களைத் தொற்றும் கிருமிகளின் தொடர்பிலான துறையில் வல்லுநர். வௌவால்களிடமிருந்து உருவாகும் நோய்களைப் பற்றி இவர் ஆய்வுகளை நடத்திவருகிறார். அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் வளர்ந்துவரும் தொற்றுநோய் திட்டத்தில் இவர் உறுப்பினர்.
அறிவியல், தொழில்நுட்பம் அல்லது பொருளியல் ரீதியாக நாட்டிற்குப் பலன் தரும் பணியை மேற்கொண்ட அறிவியல் அறிஞர்களுக்கு பிஎஸ்டிஏ எனப்படும் அதிபர் அறிவியல், தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பேராசிரியர் வாங் கௌரவிக்கப்பட்டுள்ளார். சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகியான பேராசிரியர் ஐவி இங், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் திரு (சர்) பீட்டர் கிளக்மன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் இருவருக்கு ஓமிக்ரான்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் இருவருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக முதற்கட்டப் பரிசோதனைகள் காட்டுகின்றன. அவர்களில் ஒருவர் சாங்கி விமானநிலையத்தின் முன்னிலை ஊழியர்களில் ஒருவரான 24 வயது பெண். இவர் ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள முதல் சிங்கப்பூரர். மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த 46 வயது பெண் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
ஒருவருக்கு நோய்க்கான அறிகுறிகள் இல்லை. மற்றொருவருக்கு மிதமான அறிகுறிகள் இருந்தன. இருவரின் தொடர்புகளின் தடங்களை அறியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் 10 நாள்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்குப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் வாரந்தோறும் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது.

