கொவிட்-19 கிருமித்தொற்றை நாமே அடையாளம் காணப் பயன்படுத்தும் புதிய ஏஆர்டி பரிசோதனைக் கருவி விற்பனைக்கு வந்துள்ளது. சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. $4.90 விலைகொண்ட ஃபுளோஃபிளெக்ஸ் எனும் பெயரைக் கொண்ட இக்கருவி, நேற்று முதல் அனைத்து யூனிட்டி மருந்துக் கடைகளிலும் ஃபேர்பிரைஸ் அமைப்புக்குக் கீழ் உள்ள 90க்கும் அதிகமான ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் கடைத்தொகுதிகள் உள்ளிட்டவற்றில் விற்கப்பட்டுவருகிறது.
ஐந்து ஃபுளோஃபிளெக்ஸ் கருவிகளைக் கொண்ட பொட்டலத்தி்ன்விலை $24, 25 கருவிகளைக் கொண்ட பொட்டலத்தின் விலை $117.50.
அடுத்த வாரம் முதல் இக்கருவிகள் சில சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ், எஸ்ஸோ பெட்ரோல் நிலையக் கடைகள் ஆகியவற்றிலும் கிடைக்கும்.
ஏஆர்டி கருவிகள் $10 அல்லது $5க்கும் குறைவான விலையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சென்ற மாதம் கிருமித்தொற்றைக் கையாளும் அமைச்சுகள் நிலை செயற்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பத்தாருக்கும் இலவசமாக ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளை விநியோகம் செய்யும் திட்டம் சீராக இடம்பெற்று வருவதாகவும் திரு ஓங் அப்போது தெரிவித்திருந்தார். இவ்வாண்டு அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம்வரை ஒவ்வொரு வீட்டுக்கும் 10 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும் என்று அக்டோபர் ஒன்பதாம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஏக்கோன் லபோரட்ரீஸ் எனும் அமெரிக்காவில் இயங்கும் மருத்துவக் கருவிகள் நிறுவனம் தயாரிக்கும் ஃபுளோஃபிளெக்ஸ் ஏஆர்டி கருவிக்கு, சுயமாகப் பரிசோதிக்க வகைசெய்ய கிருமிப்பரவல் காலகட்டத்திற்கான சிறப்பு நடைமுறை அனுமதித் திட்டத்தின்கீழ் அனுமதி வழங்கப்பட்டதாகவும் திரு ஓங் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் இதுவரை அனுமதி வழங்கியுள்ள 11 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளில் ஃபுளோஃபிளெக்ஸும் அடங்கும்.

