பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வு (ஜிசிஇ 'என்' நிலை) முடிவுகள் வரும் 17ஆம் தேதியன்று வெளியிடப்படும். கொவிட்-19 சூழல் காரணமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் பள்ளியிலோ இணையத்திலோ பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் ஆகியவை நேற்று அறிவித்தன.
தேர்வு முடிவுகளைப் பெறும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மாணவர்களுக்கு கொவிட்-19 தொடர்பில் சுகாதார அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். இவர்கள் டிசம்பர் 17ஆம் தேதியன்று தேர்வு முடிவுகளை நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள, முதலில் ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனையைச் செய்துகொண்டு தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
உடல் நலமில்லாத அல்லது கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள், பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதற்குப் பதிலாக அவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையம் வழியாக பிற்பகல் 3.15 மணி முதல் அறிந்திடலாம்.
மாணவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை நியமித்தும் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
'என்' நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, தங்களின் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டும் ஆலோசகர்கள் ஆகியோரை மாணவர்கள் அணுகி ஆலோசனை பெறலாம்.
'மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்' இணையத்தளத்தில் தங்களுக்கு ஏற்ற கல்வி, வேலைப் பாதைகளையும் அவர்கள் அறிந்துகொள்ளலாம்.