மனவளர்ச்சி குன்றிய மூன்று வயது பெண் குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு நேற்று பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம் மீது சுமத்தப்பட்ட குழந்தைக் கொடுமைக் குற்றச்சாட்டை அவர் அக்டோபர் 25ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
குழந்தையின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அந்த 25 வயது குற்றவாளியைப் பற்றிய விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை. இருப்பினும் உணவு விநி யோகிப்பாளராக அவர் வேலை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 23 வயதாகும் பெண்ணுடன் 2019 பிப்ரவரி முதல் ஆடவர் வாழத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் குழந்தை மனவளர்ச்சி குன்றியவர் என்பது அப்போதே அந்த ஆடவருக்குத் தெரியும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் காதலி அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தையை அவரது பாட்டி வீட்டில் விட்டுச்செல்ல முடிவெடுத்த ஆடவர், தமது காதலி குழந்தை பெறவிருப்பதை தம்மால் காண இயலவில்லை என்ற மனஉளைச்சலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் குழந்தை அழுததால் அவரது எரிச்சல் அதிகமானதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோலி இங் தெரிவித்தார்.
அதனால் ஆத்திரத்தில் குழந்தையின் வலது கன்னத்தில் ஆடவர் மூன்றுமுறை குத்தியதாகவும் முகத்தில் அறைந்ததாகவும் அதன் பின்னர் குழந்தை அழுகையை நிறுத்தியதாகவும் வழக்கறிஞர் கூறினார். காலை 6 மணியளவில் பாட்டி வீட்டில் அதனை விட்ட பின்னர் காதலியைக் காண அவர் மருத்துவ மனைக்குச் சென்றார்.
குழந்தையின் காயங்களைப் பார்த்த அவரது 43 வயது பாட்டி காவல்துறையிடம் புகார் செய்தார்.
பின்னர், கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
அதன் பிறகு ஆடவர் அவரது காதலி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து குழந்தை விடுவிக்கப்பட்ட தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.