எப்போது
அழைப்பது
மருத்துவ அவசர நிலை என்னவென்றும், எவை அவசர நிலை இல்லையென்றும் தெரிந்துகொள்வது ஒருவரது உயிரைக் காக்கும்
உயிரை அச்சுறுத்தும் அவசர சூழலில் நீங்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையை எப்போதும் நம்பலாம். அது இயக்கி வரும் 24 மணி நேர அவசர மருத்துவ சேவைகளின்(EMS) மூலம் உங்கள் உதவிக்கு வர எப்போதும் ஒரு குழு தயாராக இருக்கிறது.
995 எண்ணை அழையுங்கள்.
ஆனால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால மருத்துவ சிகிச்சைப் பிரிவு கையாண்ட 190,000க்கும் மேற்பட்ட அழைப்புகளில், 8% அதாவது தினசரி
48 தொலைபேசி அழைப்புகள் அவசர தேவை இல்லாமல் அல்லது அபாய சூழல் என தவறாக அடையாளம் காணப்பட்டன.
இதுபோன்ற சூழ்நிலைகளில் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் வேறொருவருக்கு வழங்கவேண்டிய சேவையில் தாமதத்தை இந்த அவசரமில்லா அழைப்புகள் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
இருப்பினும் மொத்த எண்ணிக்கையில் பார்க்கும்போது நிலைமை சற்று மேம்பட்டு உள்ளது. 20 ஆண்டுகளில் முதன் முறையாக அழைப்புகள் குறைந்துள்ளன.
அவசரமில்லா அழைப்புகளின் எண்ணிக்கையும் அபாய சூழல் என தவறாக அடையாளம் காணப்படுகின்ற அழைப்புகளின் எண்ணிக்கையும் 16.1% மற்றும் 14.1% குறைந்துள்ளன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவ சேவைகள் எவ்வாறு அவசர நிலை சம்பவங்களை நிர்ணயிக்கிறது?
ஒருவர் உதவிக்காக, 995 என் மூலம் தொடர்புகொண்டவுடனே, தொலைபேசி வாயிலாக நோயாளியின் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தொடர்பு மைய ஊழியர்கள், அழைப்பவர் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு நோயாளியின் நிலைமையின் அவசரத்தை தரம் பிரித்த பிறகு அதற்கேற்ப முன்னுரிமை வழங்கி வளங்களை ஒதுக்குவர்.
ஒவ்வொரு அழைப்பும் உடனடியாக முதற்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 2017ஆம் ஆண்டில் அவசர மருத்துவ சேவைகள் வழங்குவதற்க்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இக்கட்டமைப்பில், 4 பிரிவுகள் உள்ளன: உயிரை அச்சுறுத்தும் அவசரநிலை, அவசரநிலை, அவசரம் குன்றிய நிலை, மற்றும் அவசரமில்லா சம்பவங்கள்.
மாரடைப்பு, சுயநினைவற்ற நிலை, மூச்சுத்திணறல், வலிப்பு, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் காயங்கள், பக்கவாதம் முதலியவை உயிரை அச்சுறுத்தும் அவசரநிலையின் கீழ் அடங்கும். இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூடுதலான அவசரநிலை வளங்களை சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பும்.
அவசரநிலை என்பவை மோசமான ஒவ்வாமை, அவசரநிலை பிரசவம், தலைக் காயம், எலும்பு முறிவு, ஆஸ்துமா, நீடித்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோர், உடல் நலமில்லாத சிறுவர்கள் முதலியவற்றைக் கொண்டது.
அவசரம் குன்றிய நிலை என்பவை வெட்டுக் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவு, விபத்தில் ஏற்பட்ட தோல் காயம், வீக்கம், லேசான காயம், விடாப்பிடியான காய்ச்சல் முதலியவற்றைக் கொண்டது.இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் சற்று மெதுவாகவும் குறைவான முன்னுரிமையிலும் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்வர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைதனது தீயணைப்பு மீட்பு அதிகாரிகளை (FRS) முதல் மூன்று நிலைபிரிவுகளுல் அடங்கிய சம்பவங்களுக்கு அனுப்பும். 2012ஆம் ஆண்டு முதல் 300க்கும் மேற்பட்ட குடிமைத் தற்காப்பு படையினர் அவசரகால மருத்துவ தொழில்நுட்பர்களாக(EMT) மாற்றுப் பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசர நிலை சம்பவங்களைக் கையாளக்கூடியவர்கள்.
இந்த அதிகாரிகள் (FRS-EMT) உயிரை அச்சுறுத்தும் அவசரநிலை சம்பவங்களின்போது தீயணைப்பு வாகனங்களில் 'ரெட் ரைனோ' எனும் விரைவு தீயணைப்பு வாகனங்களிலோ அல்லது தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களிலோ சம்பவ இடத்துக்குச் செல்லலாம். தீயணைப்பு மோட்டார்சைக்கிள்களில் அத்தியாவசியமான மருத்துவ பொருட்களான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், இதயத்துடிப்பைச் சீர்செய்யும் கையடக்கக் கருவி(AED), உணர்கருவிகள் போன்றவை வைத்திருக்கப்படும். தீயணைப்பு மோட்டார்சைக்கிள் கச்சிதமாக இருப்பதால், அவசர மருத்துவ வாகனத்தைவிட சம்பவ இடத்தை விரைந்தடையும்.
மலச்சிக்கல் மற்றும் தோல் சரங்கு போன்ற அவசரமில்லா சம்பவங்களுக்கு அவசர நிலை மருத்துவ உதவி தேவைப்படாது. 2019ஆம் ஆண்டு முதல் அவசரமில்லா சம்பவங்களாக அடையாளம் காணப்படுவோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை நிறுத்தியுள்ளது. அவர்கள் சுய மருத்துவ உதவி செய்துகொள்ளவோ அல்லது ஏதேனும் ஒரு மருந்தகத்தில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளவோ அறிவுறுத்தப்படுகின்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட விரும்புவோர், 1777 எனும் எண்ணில் அவசரமில்லா
ஆம்புலன்ஸ் சேவையை ஒரு கட்டணத்தை செலுத்தி, நாட அறிவுறுத்தப்படுவர்.
மேல் விவரங்களுக்கு இந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது https://www.scdf.gov.sg/home/about-us/information-on-ems/scdf-emergency-medical-services இணையத்தளத்தை நாடலாம்.

